பாளை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை :  பாளை ரயில் நிலையம் வழியாக தினமும் திருச்செந்தூர் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் பயணிகள் ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கின்றனர். குறிப்பாக அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன அலுவலர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் திருச்செந்தூர், நாசரேத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் பக்தர்கள் என பல்வேறு தரப்பினர் தினமும் பயணிக்கின்றனர்.

மேலும் வழி நெடுக நிற்கும் நிறுத்தங்களில் பல்வேறு கிராம மக்களும் இந்த ரயிலில் பயணிக்கின்றனர். இருமார்க்கங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் ரயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. பாளை ரயில் நிலையத்தில் இருந்து அதிக பயணிகள் திருச்செந்தூர் செல்கின்றனர். இதுபோல் இங்கு வந்து இறங்குபவர்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் பாளை ரயில் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் பயணிகளுக்கு இல்லை. பிளாட்பாரங்களில் மேற்கூரை இல்லாமல் திறந்த வெளியாக காணப்படுகிறது.

மேலும் இங்குள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதில்லை. போதுமான கழிப்பறை வசதிகள், இருக்கைகள் ஏற்படுத்துவதுடன், இரவு நேரங்களில் பிளாட்பாரத்தில் கூடுதல் மின் விளக்கு வசதி செய்யவேண்டும். ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் அனைத்து வகுப்பிற்குமான தட்கல் டிக்கெட் பதிவு, காலை முதல் மாலை வரை முழுநேர முன்பதிவு போன்ற வசதிகளையும் மேம்படுத்தவேண்டும். ரயில் நிலையத்திற்கு ரயில் வரும் செல்லும் நேரங்களில் பாளை பஸ் நிலையம், புது பஸ் நிலையம், சந்திப்பு பஸ் நிலையங்களில் இருந்து புதிய வழித்தடங்களில் நகர சர்வீஸ் பஸ்கள் இயக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: