கொள்ளிடம் அருகே இருளில் மூழ்கிய தெருவால் பொதுமக்கள் அவதி-புதிய மின்கம்பம் அமைக்க வலியுறுத்தல்

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே கம்பன் தெரு இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே புதிய மின்விளக்கு கம்பம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சியில் உள்ள கம்பன் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இங்கு தெருவிளக்கு மின் கம்பங்கள் போதிய அளவுக்கு அமைக்கப்படாததால் தெருவின் பாதி அளவுக்கு தெரு மின்விளக்கு எரியாமல் இரவு நேரங்களில் இருண்டே காணப்படுகிறது. இதனால் கம்பன் தெருவை சேர்ந்த சிறுவர்கள், பள்ளி மாணவர்கள், மற்றும் முதியவர்கள் இரவு நேரங்களில் தெரு பகுதிக்கு வந்து செல்வதற்கு மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இரவு நேரங்களில் தெரு பகுதியில் வரும்போது பாம்பு அல்லது தேள் போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் இரவு நேரத்தில் இரவு 8 மணியிலிருந்து தெருவில் நடப்பதையே நிறுத்தி விடுகின்றனர். பின்னர் பொழுது விடிந்த பிறகு காலை நேரத்தில் வீட்டை விட்டு தெரு பகுதிக்கு வெளியே வருகின்றனர். அப்படி அவசர காலத்தில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பெரும் அச்சத்துடன் தெருவில் சென்று வருகின்றனர்.

எனவே இந்த கம்பன் தெருவில் மேலும் இரண்டு மின் கம்பங்கள் அமைத்து தெரு மின்விளக்குகள் பொறுத்துவதற்கு ஊராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டு கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த இரு மின் கம்பங்களுக்கு தேவையான குறிப்பிட்ட தொகையை தமிழ்நாடு மின்சார வாரிய கொள்ளிடம் அலுவலகத்தில் ஊராட்சி சார்பில் செலுத்தப்பட்டு விட்டது. புதிய தெரு மின்விளக்கு கம்பங்களுக்கான உரிய தொகையை செலுத்தி மூன்று மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை மின்கம்பம் தெருவில் புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து கோபாலசமுத்திரம் ஊராட்சி ஊழியர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், கோபாலசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த கம்பன் தெருவுக்கு புதியதாக இரு மின்கம்பங்கள் அமைப்பதற்கு அதற்குரிய தொகையை மின்சார வாரிய அலுவலகத்தில் செலுத்தி அதற்கான ரசீது பெற்று மூன்று மாதத்திற்கும்மேல் ஆகிவிட்டது.

ஆனால் இதுவரை புதியதாக மின்கம்பங்கள் அமைத்துக் கொடுக்காததால் தெருவின் பாதி பகுதி இரவு நேரங்களில் இருண்டே கிடக்கிறது.எனவே மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் புதியதாக மின் கம்பங்கள் அமைத்து தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: