சின்னமனூர் அருகே அமைந்துள்ள ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பனி மூடிய கிராமங்கள்

*சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

*அடிப்படை வசதிகள் அமைக்க கோரிக்கை

சின்னமனூர் : சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பகுதியில் உள்ள 7 மலை கிராமங்கள் தற்போது கொட்டும் பனியால் மூடிக்கிடக்கின்றன. இதனை ரசிக்க சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர்.சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை வரிசையில் இயற்கை அழகோடு சொர்க்க பூமியாய் ஏழுமலைகளுடன் அமைந்துள்ளது ஹைவேஸ் பேரூராட்சி. இங்கு வானுயர்ந்த மரங்கள் அதிகம் உள்ளன.

இங்குள்ள 7 மலைகளிலும் விவசாயம் பிரதானமாக உள்ளது. இதன்படி சுமார் 20,000 ஏக்கரில் தேயிலை சாகுபடியும், பிற பகுதிகளில் ஏலம், காபி, மிளகு, ஆரஞ்சு உள்ளிட்ட பணப்பயிர்கள் மற்றும் வாசனை திர வியங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த ஹைவேவிஸ் பேரூராட்சியை அடுத்துள்ள மலைப்பகுதியில் நீண்ட வரிசையில் அடுக்கம்பாறை, அந்துவான், சில்வர்குடுசு, ஆனந்தா, மேகமலை, கலெக்டர்காடு எஸ்டேட்டுகள், மணலார், மேல் மணலார், வெண்ணியார், மகராஜன் மெட்டு, இரவங்கலார் பகுதிகள் தேயிலை, காபி மற்றும் ஏலத் தோட்டங்களாக இருப்பதால் எங்கும் வானுயர்ந்த மரங்கள், இயற்கை எழில் கொஞ்சும் பசுமை தோட்டங்கள் இருப்பதால் ஆண்டு முழுவதும் குளிர்ந்த காற்று வீசுகிறது.

மலைச்சாலைகளில் இருந்து பார்க்கும்போது, வெள்ளியை உருக்கி ஊற்றுவது போல் கண் கவரும் அருவிகளும், அவற்றில் சிங்கவால் குரங்களுடன், மைனா, கொக்கு உள்ளிட்ட பல்வேறு இன பறவைகளின் ஒலிகளில் காதுகளில் ரீங்காரமிடுகிறது. கேரள மாநிலம் தேக்கடி பகுதியை சார்ந்து இருப்பதால் வருடத்தில் 8 மாதம் வரை இப்பகுதிகளில் பரவலாக மழை பெய்கிறது. இதற்கிடையே இப்பகுதியில் உள்ள தேயிலை ேதாட்டங்களில் அவ்வப்போது நுழையும் யானைகள் மற்றும் காட்டு மாடுகள் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது. இந்த பகுதிக்கு வரும் விலங்குகள் அணைப்பகுதிகளிலும், அதனை ஒட்டியுள்ள ஏரிப் பகுதிகளிலும் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன.

ஆனால் சில நேரங்களில் இதுபோல் வரும் யானைகளில் சில மலைக்கிராமங்களில் அமைந்திருக்கும் குடியிருப்புகளில் நுழைந்து மரக்கிளைகளை உடைப்பது வாடிக்கையாக உள்ளது. தென்பழநி மலையின் அடிவாரத்திலிருந்து 18 கொண்டை ஊசி வளைவுகளுடனும் சின்னமனூரில் இருந்து 53வது கி.மீ தொலைவிலும் ஹைவைவிஸ் பகுதியின் 7வது மலையான இரவங்கலார் அமைந்துள்ளது. இதையடுத்து கேரளா தொடர்கிறது. இந்த மலை கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 8,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்கு யாவரையும் மயக்கும் இயற்கை அழகுகளின் பரிணாமத்தை கண்டு, கடந்த 2008ம் ஆண்டு திமுக அரசின் முதல்வரான கலைஞர் கருணாநிதி ஹைவேவிஸை சுற்றுலாத்தலமாக அறிவித்து 3 ஆண்டுகள் கோடை விழாவும் நடத்தியதால் பொதுமக்கள், தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.யானை கூட்டங்களும், சிறுத்தைகள், வரிப்புலிகள், காட்டு மாடுகள், வரிக்குதிரைகள், அரியவகை பாம்பு இனங்கள், சிங்கவால் குரங்குகள், கருஞ்சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட பல உயிரினங்கள் இங்குள்ள 1.50 ஏக்கர் வனப்பகுதிக்குள் வாழ்கின்றன.

இதனால் இப்பகுதி வனத்துறையின் கட்டுப்பாட்டிலும், மேகமலை வன உயிரின புலிகள் சரணாலயமாக இருக்கிறது. ஹைவைவிஸ் மலைப்பகுதியில் சுற்றுலா தலத்திற்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த 2009ம் ஆண்டில் திமுக அரசு முயற்சிகள் மேற்கொண்டது. அதன்பின் வந்த அதிமுக அரசு இந்த பணிகளை கண்டுகொள்ளாமல் போனது.

இந்த ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு உள்நாடு தவிர்த்து வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

இதற்கிடையே கார்த்திகை மாதம் பிறந்தவுடன் இப்பகுதியில் குளிர்காலம் தொடங்குகிறது. இதனால் மேகமலையில் உருவாகும் மேக கூட்டங்கள் வனக்காடு தேயிலை, ஏலம், காபி தோட்டங்களையும்், 7 மலைக்கிராமங்களையும் சூழ்ந்து மூடிக்கொண்டு பகலை இரவாக்குகிறது. இப்பகுதிக்குபொதுமக்கள் பயணிக்க இரண்டு அரசு பஸ் உட்பட 3 பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் பகலிலேயே பனி மூட்டத்துக்குள் நுழைந்து மழைச்சாலைகளையும், கொண்டை ஊசி வளைவுகளையும் மஞ்சள் முகப்பு விளக்குகடன் கடந்து செல்கிறது.

இதன்படி சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசிப்பதுடன், தஙக்ளை பனி மூட்டத்திற்குள் ெதாலைக்கும் சொர்க்கபுரியாக இருக்கம் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பது இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

35 மெகாவாட் மின் உற்பத்தி

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் 1978ம் ஆண்டு ஹைவேவிஸ், தூவானம், மணலார், வெண்ணியார், இரவங்கலார் என ஐந்து அணைகளை தமிழக அரசு உருவாக்கி மழைநீரை தேக்குகிறது. தூவனத்தில் கசியும் தண்ணீரே கம்பம் அருகில் உள்ள சுருளி தீர்த்தத்தில் அருவியாக கொட்டுகிறது. இதனால் அது சுற்றுலா தலமாக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி, நான்கு அணைகளில் இருந்து சுரங்கப் பாதை வழியாக தண்ணீரை பம்பிங் செய்து இரவங்கலார் அணையில் தேக்குகின்றனர். பின் இங்கிருந்து தண்ணீரை லோயர்கேம்ப் அருகில் உள்ள சுருளி மின் உற்பத்தி நிலையத்திற்கு மகாராஜன் மெட்டு வழியாக ஒற்றைக் குழாயில் அனுப்பி தினந்தோறும் 35 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கின்றனர்.

Related Stories: