கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் மின்தகன மேடை பணியை எதிர்த்து மக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பில், ஒரு சமுதாயத்தினருக்கு ஆதரவாக ரூ.30 லட்சம் மதிப்பில் நவீன மின் தகனமேடை அமைக்கும் பணிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள், இங்கு அமைக்கப்படும் நவீன மின் தகன மேடை அமைக்கும் பணிகளை நிறுத்திவிட்டு, அதை வேறிடத்தில் அமைக்க வேண்டும் என்று டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், செயல் அலுவலர் யமுனா ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர். எனினும், கிராம மக்களிடம் பேரூராட்சி நிர்வாகம் ஆலோசிக்காமல், நவீன மின் தகன மேடை அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தி வந்துள்ளது.

இந்த நிலையில், இன்று காலை நவீன மின் தகன மேடை அமைக்கும் பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலரை முற்றுகையிட்டு 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டன. இதன்பின்னர் நவீன மின் தகன மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட சப்-கலெக்டர் ஐஸ்வர்யா, இப்பிரச்னை குறித்து வட்டாட்சியர் கண்ணன் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டார்.

Related Stories: