கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் வினோத சேத்தாண்டி திருவிழா-ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்பு

கொடைக்கானல் : கொடைக்கானல் மலைகிராமத்தில் நடைபெற்ற வினோத சேத்தாண்டி திருவிழாவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் சேற்றை உடம்பில் பூசி கொண்டு கொண்டாடினர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கீழ்மலை மற்றும் மேல்மலை என இருபகுதிகளாக மலைக்கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. கீழ்மலை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பட்டாளம்மன் முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த நவ. 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இறுதி நாளான நேற்று கரியாமல் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தாண்டிக்குடி, மங்களம் கொம்பு, பட்லாங்காடு, பண்ணைக்காடு, காமனூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் வயது வேறுபாடு இன்றி கலந்து கொண்டனர்.இந்த கிராம திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் ஒன்று திரண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றை அடித்தும் சேத்தாண்டி வேடம் போட்டு அம்மனை வணங்குகின்றனர். இவ்வாறு சேற்றை உடம்பில் பூசி கொள்வதால் நோய் நொடி வராது, விவசாயம் செழிக்கும் என்பது இந்த கிராம மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் இந்த வினோத திருவிழா 200 வருடங்களாக நடைபெற்று வருவதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Related Stories: