61 நாட்கள் தடைகாலம் முடிந்து கடலூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்!

கடலூர்: 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்துள்ளதால், மீனவர்கள் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். ஒவ்வொரு ஆண்டும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விசைப் படகுகளில் சென்று ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் 267 இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகளும், 3,763 இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளும் இந்த மீன்பிடி தடை காலத்தில் மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த தடை காலத்தை பயன்படுத்தி, மீனவர்கள் தங்கள் படகுகளையும், வலைகளையும் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடலூர் துறைமுகத்தில் மீனவர்கள் தங்கள் வலைகளில் உள்ள கிழிந்த மற்றும் சேதம் அடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் படகுகளில் ஏற்பட்டிருந்த பழுதுகள் மற்றும் உதிரிபாகங்களை மாற்றும் பணியிலும் ஈடுபட்டனர். இதையடுத்து மீனவர்கள் தங்கள் படகுகளுக்கு வர்ணம் பூசி மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்தனர்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வந்ததால் கடலூர் துறைமுகம், பரங்கிப்பேட்டை, அன்னங்கோவில், தாழங்குடா, அய்யம்பேட்டை உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இதற்காக ஏற்கனவே தங்கள் படகுகளில் தேவையான உணவுப் பொருட்கள், குடிநீர், டீசல் மற்றும் ஐஸ் கட்டிகளை ஏற்கனவே தயார் நிலையில் வைத்திருந்தனர்.இவர்கள் தங்கள் படகுகளுக்கு படையலிட்டு, கடல் தேவதையை வணங்கி மீன்பிடிக்க சென்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் முதல் மீன் பிடிக்க சென்ற படகுகள் அனைத்தும் கரைக்கு திரும்பும். அதன் பிறகு மீன் விற்பனை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post 61 நாட்கள் தடைகாலம் முடிந்து கடலூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்! appeared first on Dinakaran.

Related Stories: