பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை : பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நீலகிரி காவல் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக விசாகா குழுவில் புகார் அளிக்கப்பட்டது. அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிய மோகனகிருஷ்ணனுக்கு எதிராக விசாகா கமிட்டியில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. மோகன கிருஷ்ணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசாகா கமிட்டி பரிந்துரை செய்து இருந்தது. இந்த நிலையில், விசாகா குழுவின் உத்தரவை எதிர்த்து மோகனகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி பரதசக்கரவர்த்தி இன்று விசாரித்தார்.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில்,”பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. பணியாற்றும் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பணியிடங்களில் பாலியல் தொல்லை நெறிபிறண்ட செயல் மட்டுமல்லாமல், மறைமுக சமூக பிரச்சனையாகவும் உள்ளது. பணியிடத்தில் பெண்களுக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்துவதுடன் மன, உடல் ரீதியாக பெண்ளை பாதிக்கிறது. மோகனகிருஷ்ணன் தரப்பு சாட்சியை விசாரணை செய்யவில்லை என்பதால் பாலியல் தொல்லை தொடர்பாக மீண்டும் விசாரித்து அறிக்கைதர விசாகா குழுவுக்கு ஆணையிடுகிறோம். குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிய அவகாசம் வழங்கி 60 நாட்கள் விசாரித்து அறிக்கை அளிக்க விசாகா குழுவுக்கு உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post பணியிடங்களில் பாலியல் தொல்லையால், சம்பந்தப்பட்ட பெண்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை : சென்னை உயர்நீதிமன்றம் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: