கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு!

கோவை : கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி, கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்டமாக கோவை ஒண்டிப்புதூர், எல் அண்ட் டி நெடுஞ்சாலை, பாரதியார் பல்கலைக்கழகம் அருகே உள்ள இடம், சிறை மைதானம் ஆகிய 4 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், திமுக முப்பெரும் விழாவிற்காக கோவை சென்ற விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நேரடியாக ஒண்டிப்புதூர் சென்று சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், தொழிற்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத் துறையிலும் உலகமே உற்றுப்பார்க்கும் வகையில் உயர்வதை உறுதி செய்வோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில்,”மக்களவைத் தேர்தல் 2024-ன் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார்கள்.

இந்நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கு ஏற்புடைய இடத்தை தேர்வு செய்வதற்கான முதற்கட்டப் பணிகளை இன்று தொடங்கினோம். அதன்படி, கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என இன்று நேரில் ஆய்வு செய்தோம். தொழில்துறையில் சிறந்து விளங்கும் கோவை மாநகரம், விளையாட்டுத்துறையிலும் உலகமே உற்று நோக்குகிற வகையில் மேலும் உயர்வதை உறுதி செய்வோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோவை ஒண்டிப்புதூரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு! appeared first on Dinakaran.

Related Stories: