வனத்துறை அலட்சியம்: காரைக்கால் அலையாத்தி காட்டுக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைவு

காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கடற்கரையில் பல ஏக்கர் அளவில் இயற்கையாக அலையாத்திக் காடு அமைந்துள்ளது. கடந்த 2011 மற்றும் 2012ம் ஆண்டு காலக்கட்டத்தில் செடிகள் பெரிய அளவில் காடுகளாக வளர்ந்து நின்றதால், சைபீரியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பறவைகள் காரைக்கால் அலையாத்தி காடுகளில் தங்கி இரை தேடியும், இளைப்பாறியும் இனப்பெருக்கமும் செய்தன.

ஆனால்,மாவட்ட நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக வேளாண்துறை கீழ் செயல்படும் வனத்துறையும், போதிய அக்கறை காட்டாததால்,அலையாத்தி காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பறவைகள் வேட்டையாடுவோர் அதிகரித்தனர். குறிப்பாக அலையாத்தி காட்டின் உள்ளே புகுந்து பறவைகளை வேட்டையாடுவதை யாரும் தடுக்கவில்லை. இதனால் வருடத்திற்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பறவைகள் வந்த சென்ற இடத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அலையாத்திக்காடு பராமரிப்பு இல்லாததால் பறவைகள் வரத்து குறைந்து விரல் விட்டு எண்ணும் அளவில் தற்போது வருவது வேதனை அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே புதுச்சேரி அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் அலையாத்தி காடு முழுமையாக பராமரித்து வெளிநாட்டு பறவைகள் அதிகளவு வருவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இயற்கையாக தீவு போல் அமைந்துள்ள அலையாத்திக்காட்டை சீர்செய்து சுற்றுலாப்பயணிகள் படகு சவாரி மற்றும் பறவைகள் சரணாலயம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: