விராலிமலை முருகன் கோயிலில் முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் திறந்தவெளியில் உடை மாற்றும் அவலம்-தனி அறை கட்டித்தர கோரிக்கை

விராலிமலை : உடை மாற்றும் அறை, குளியல் அறை இல்லாததால் விராலிமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பது, உடை மாற்றுவது என திறந்தவெளியில் செய்ய வேண்டிய நிலையால் பெண் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.விராலிமலை முருகன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் அருணகிரிநாதரால் பாடல் பெற்று அஷ்டமாசித்தி எனும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை முருகன் இத்தலத்தில் தான் கற்றருளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன. 207 படிகளுடன் கொண்ட இம் மலைக்கோயிலின் மேலே வள்ளி, தெய்வானை சமேதராக ஆறுமுகங்களுடன் முருகன் மயில் மேல் அமர்ந்து காட்சியளிப்பது இக்கோயிலின் தனி சிறப்பாகும். தேசிய பறவையான மயில்கள் இம்மலையின் அடர்ந்த வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும், பல்வேறு சிறப்பு பெற்ற இந்த மலைக் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.

இந்த நிலையில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். முடிக்காணிக்கை செலுத்திய பின் அவர்கள் குளிப்பதற்கு மறைவான அறைகள் இல்லை மேலும் உடை மாற்றும் அறையும் இங்கு இல்லாததால் தனிமையில் செய்ய வேண்டிய வேலைகளை பொது வெளியிலேயே செய்ய வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலும் பெண் பக்தர்களின் நிலை மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள தொட்டியில் திறந்த வெளியில் குளித்துவிட்டு உடை மாற்றுவதற்கு என மறைவான இடம் இல்லாததால் உடை மாற்றுவதற்கு பெண்கள் படும் சிரமம் வேதனையிலும் வேதனையான ஒன்று எனவே இந்நிலையை மேலும் தொடரவிடாமல் இந்து சமய அறநிலையத்துறையினர் இக்கோயிலில் குளியலறை மற்றும் ஆண்கள், பெண்கள் உடை மாற்றுவதற்கு தனி தனி அறைகள் உடனடியாக கட்டிக் கொடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: