வேலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய 66 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் திறப்பு-இன்று கடைசி நாள்

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய 66 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் நேற்று திறக்கப்பட்டிருந்தது.  பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசி நாள் ஆகும்.

 தமிழகத்தில் நெல்-II (சம்பா) பருவத்திற்கு பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் சேர்வதற்கான இறுதி நாள் கடந்த 15ம் தேதி என்பதால், அதிக எண்ணிக்கையில் விவசாயிகளை சேர்க்கும் பொருட்டு வங்கி விடுமுறை நாட்களான கடந்த 12, 13ம் தேதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களும், அவை நடத்தும் பொதுச் சேவை மையங்களும் இயங்கியது. நெல்-II (சம்பா) பருவத்திற்கு பயிர்க்காப்பீடு செய்வதற்கான இறுதிநாள் இன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இப்பருவத்திற்கு அதிக எண்ணிக்கையிலான விவசாயிகளை பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் சேர்த்திட ஏதுவாக, விடுமுறை நாட்களில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பதிவாளரை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடத்தப்பெறும் பொதுச்சேவை மையங்கள் ஆகியன, வங்கி விடுமுறை நாளான நேற்று திறக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள 66 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அவற்றால் நடைபெறும் பொதுச்சேவை மையங்கள் நேற்று திறந்து, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர்.அதேபோல், வேலூர் தொரப்பாடியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, கூட்டுறவு சங்கங்களில் பயிர் காப்பீடு செய்ய வரும் விவசாயிகளை திருப்பி அனுப்பக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

Related Stories: