போடியில் மழையால் மண் சரிவு; மா, எலுமிச்சை, நெல்லி கன்றுகள் நாசம்: விவசாயிகள் கவலை

போடி: போடி அருகே வடக்கு மலைப்பகுதியில் தொடர் மழையின் காரணமாக நேற்று முன்தினம் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் அதிக அளவிலான இலவம், எலுமிச்சை, மா, நெல்லி போன்ற கன்றுகள் நாசமடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். போடி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இது வழியில் இருந்த பாறைகளை அடித்து உருட்டியதுடன், பெருக்கெடுத்த வெள்ளம் ஆற்றின் பாதையை மாற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளில் பாய்ந்தது.

இதனால் இப்பகுதிகளில் பல ஏக்கரில் விவசாய பயிர்கள் நாசமாயின. இந்த வடக்கு மலையின் அடிவார பகுதிவரை டூவீலர், டிராக்டர் போன்றவை செல்லும். அதன்பிறகு வடக்குமலைக்கு செல்லும் ஒற்றையடி பாதைகளில் விவசாயிகள் நடந்து செல்வது வழக்கம். இந்த மலைப்பகுதியில் தனிக் கிராமங்களாக அல்லாமல் உரல்மெத்து, இலங்காவரிசை, பனங்கொடை, அத்தியூத்து என தோட்டங்களை சார்ந்த கிராமங்கள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் இலவு, மா, பலா, எலுமிச்சை, நெல்லி, ஆரஞ்சு உள்ளிட்ட பயிர்கள் தொடர்ந்து விளைவிக்கப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழையால் கடந்த சில நாட்களாக வெள்ளம் அதிக அளவில் பெருக்கெடுத்து அடிவாரத்திற்க்கு வந்து கொண்டிருக்கிறது.

மலையில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளம் வழியில் உள்ள பெரும் பாறையை பெயர்த்து மண்ணுடன் சேர்த்து பொதுமக்கள் நடக்கும் பாதையில் குவித்துள்ளது. இதனால் பாதை தெரியாத அளவிற்கு உருமாறிப்போனது. மேலும் மலைப்பகுதிகளில் இருந்து வந்த மழை வெள்ளம் கடந்து செல்ல பாதையின்றி விவசாய பயிர்களை அழித்து நாசமாக்கி விட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: