4ம் தேதி சென்னையில் பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கு மாறுதல் கவுன்சலிங்

சென்னை: பள்ளித்துதுணை ஆய்வாளர்களுக்கான மாறுதல் கவுன்சலிங்  4ம் தேதி சென்னையில் நடக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பள்ளிக் கல்வித்துறையில் நிர்வாக மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு 120 மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட  32 மாவட்ட கல்வி அலுவலகங்கள் (தொடக்க கல்வி 58, இடைநிலைக் கல்வி 55, தனியார் பள்ளிகள் 39) செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகங்களுக்கு பணி நிரவல் மூலம் பணியாளர்களை நியமனம் செய்ய அரசாணை வெளியிடப்பட்டதின் பேரில்  மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை) முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்  அலுவலகத்துக்கு பள்ளித்துணை ஆய்வாளர் பணியிடங்கள் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  மாவட்ட கல்வி அலுவலகங்கள் பணியில் உள்ள பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கும் மாறுதல் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை), முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குநர் அலுவலகத்துக்கு தற்போது நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பள்ளித் துணை ஆய்வாளர்கள் பணியிடங்கள் அனைத்தையும் காலிப் பணியிடங்களாக கருதி மாறுதல் கவுன்சலிங் நடத்தப்படும்.

எனவே, தற்போது நடைமுறையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில் பணியில் உள்ள பள்ளித்துணை ஆய்வாளர்கள் அனைவரும் 4ம் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள பள்ளிக் கல்வி ஆணையரக வளாகத்தில் நடக்கும் கவுன்சலிங்கில்  கலந்து கொள்ள வேண்டும். இந்த கவுன்சலிங்கில் கலந்து கொள்ளாத  பள்ளித் துணை ஆய்வாளர்களுக்கு பள்ளி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி) பணி மாறுதல் வழங்கி  ஆணையிடுவார். இவ்வாறு அந்த அறிக்கையில்  இணைஇயக்குநர் நரேஷ் தெரிவித்துள்ளார்.

Related Stories: