மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளின்படி மின் வாகனம், தொழில்கள், சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

சென்னை: மாநில திட்டக்குழுவின் கொள்கை வரைவுகளான தொழில் மயமாதல், மின்வாகனம், தொழில்கள் மற்றும் சுற்றுலாவின் வளர்ச்சியை மேம்படுத்துவது, புதிய கொள்கைகளை வகுப்பது குறித்தான ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மாநில திட்டக்குழு புதிய கொள்கைகளை முதல்வரின் வழிகாட்டுதலுக்கிணங்க வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மாநில திட்டக் குழுவால் பல்வேறு துறைகளுக்குரிய 10 கொள்கைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அவற்றில் பணி முடிவுற்ற நிலையில் உள்ள 3 கொள்கைகளான

* 6 துறைகளை உள்ளடக்கிய தொழில் மயமாதல் கொள்கை -  மின்வாகனம், தொழில்கள் 4.0,  குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், துணிநூல், கைத்தறி மற்றும் சுற்றுலா

* தமிழ்நாடு சுகாதார நலக் கொள்கை

* திருநர் + நலக்கொள்கைகள் ஆகியவை குறித்து முதல்வரிடம் கூட்டத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

மேலும், இந்த கொள்கைகளை செயல்படுத்துதல் மற்றும் முக்கிய  முன்னெடுப்புகள்  குறித்தும்  விவாதிக்கப்பட்டது. மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், திட்டம் மற்றும் வளர்ச்சி துறை செயலாளர் விக்ரம் கபூர் ஆகியோர் கொள்கைகள் குறித்து விளக்கினர். இதை தொடர்ந்து, தொழில் மயமாதல் கொள்கை குறித்து, மல்லிகா சீனிவாசனும், தமிழ்நாடு மருத்துவக் கொள்கை குறித்து டாக்டர் அமலோற்பவநாதன் மற்றும் திருநர் + நலக்கொள்கை குறித்து நர்த்தகி நட்ராஜும் விவரித்தனர்.

கூட்டத்தில், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தலைமை செயலாளர் இறையன்பு, குழு உறுப்பினர்கள் ராம.சீனுவாசன், ம.விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு.தீனபந்து, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன், நர்த்தகி நடராஜ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் சந்தரமோகன், மாநில திட்டக்குழுவின் உறுப்பினர் செயலர் ராஜசேகர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: