ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு

பெரம்பூர்: ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் என்றும், கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கிவிட்டுச் சென்றுள்ளார், என்றும் கலைஞர் நூற்றாண்டு நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து பேசியுள்ளார். கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் மேற்கு பகுதி திமுக சார்பில், கொளத்தூர் ஜி.கே.எம்.காலனி விளையாட்டு திடலில் நேற்று முன்தினம் மாலை பகுதிச் செயலாளர் நாகராசன் ஏற்பாட்டில் ‘குறளோவியம் தந்த தமிழோவியம்’ என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன் எம்பி, கவிஞர் வைரமுத்து, தி இந்து குழும முன்னாள் தலைவர் இந்து என்.ராம், இஸ்ரோ விஞ்ஞானி தேன்மொழி செல்வி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இதில், ஜெகத்ரட்சகன் பேசுகையில், ‘‘பாஜவினர் ராமர் கோயில் கட்டியதோடு சரி. ஆனால் விளக்குக் கூட ஏற்றாமல் இருந்த கோயில்களை மேம்படுத்தி குடமுழுக்கு நடத்தியது நமது திமுக அரசு தான். கலைஞர், என்னிடம் வாருங்கள் எல்லோரும் சாமியை வணங்குவோம் என்று கூறினார். அந்த சாமி ஈ.வெ.ராமசாமி. வாழ்க்கை முழுவதும் தமிழ் மண்ணை நினைத்து வாழ்ந்தவர் கலைஞர்,’’ என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசுகையில், ‘‘தூக்கத்தில் இருந்து எழுப்பி திருவள்ளுவரையும், கலைஞரையும் பற்றி பேச, எழுத வேண்டுமென்று சொன்னால் நான் எப்போதும் தயாராக இருப்பேன். பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன்பு விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்தார். அவர் தியானம் செய்தது விவேகானந்தர் மண்டபம், வணங்கியது திருவள்ளுவர் சிலையை. அதைக் கட்டி எழுப்பியவர் கலைஞர். கலைஞர் தமிழ்நாட்டில் செல்லாத இடம் உண்டா, அவர் எழுதாத நூல் உள்ளதா, அவர் கொண்டு வராத திட்டம் ஏதும் உள்ளதா, அவர் திறக்காத பள்ளிக்கூடம் ஏதும் உள்ளதா.

நான் சென்னையில் பயணம் செய்யும்போது இது கலைஞருடன் நான் சென்ற இடம், இது அவர் கட்டிய பாலம், இது அவர் திறந்த வளாகம், அவர் தொடங்கிய திட்டம், அவர் திறந்த கட்டிடம் என எனக்கு அவரது நினைவுகள் வரும். ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றுக்கொண்டே இருப்பார். ஒவ்வொரு செயலிலும், சொல்லிலும் ஆசானாக இருந்தவர். நெருக்கடி நிலையில் கட்சியை நிலைத்து நிறுத்தி, எம்.ஜி.ஆர் என்னும் மக்கள் சக்தியிடம் இருந்து ஆட்சியை பெற்றவர். 17 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாமலும் கட்சியை ஒரே நபராக இருந்து காப்பாற்றியவர். ஓர் கொள்கையை, ஓர் இயக்கத்தை, ஓர் கட்சியை, ஏன் காலத்தை சுமந்து கொண்டு வந்த கலைஞருக்கு எவ்வளவு எதிர்ப்பு இருந்திருக்கும். அதையெல்லாம் தாண்டி சாதனையாளராக திகழ்கிறார் கலைஞர்,’’ என்றார். நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கிழக்கு பகுதிச் செயலாளர் ஐ.சி.எப்.முரளி, மண்டலக்குழு தலைவர் சரிதா, செயற்குழு உறுப்பினர்கள் சந்துரு, மகேஷ்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஒவ்வொரு நாளும் புதியவற்றை கற்றவர் கலைஞர் கலைஞரால் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையைத்தான் மோடி வணங்கினார்: கவிஞர் வைரமுத்து பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: