அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக திகழ்ந்தவர் ஆட்சியில் இருந்துகொண்டே பெரியாரிய கருத்துகளை முன்னெடுத்தவர் கலைஞர்: நூற்றாண்டு நிறைவு வாழ்த்தரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்

சென்னை: சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பாக கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா வாழ்த்தரங்கம் வேளச்சேரி குருநானக் கல்லூரி அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனித நேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்பி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில் செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘‘விளிம்பு நிலையிலிருந்து ஓரளவிற்கு என்னைப் போன்றோர் வந்ததற்கு காரணம் கலைஞர். பெரிய ராஜதந்திரி கலைஞர். திமுக- காங்கிஸ் மற்றும் ராகுல்காந்தி- முதல்வருக்குமான உறவு உணர்வுப்பூர்வமானது,’’ என்றார்.

திருமாவளவன் பேசும்போது, ‘‘போராட்டம் நிறைந்த பொதுவாழ்வு, 50 ஆண்டுகாலம் தமிழக அரசியலின் அச்சாணியாக விளங்கியவர் கலைஞர். ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அரசியலின் மையப்புள்ளியாக இருந்தவர். அவரை எதிர்த்துதான் அரசியல் இயக்கங்கள் உருவாகின. அண்ணாவின் சீடர்களில் வலுவானவர் கலைஞர். அரசியலில் ஒரு கட்சியினை நடத்துவது எளிதல்ல. அதிலும் ஒரு ஆட்சியினைப் பிடித்து அதனை நடத்துவது எளிதல்ல. ஆட்சியில் இருந்து கொண்டு பெரும்பான்மை மக்கள் எதிர்க்கின்ற கருத்தினையும் பெரியாரிய கருத்துகளையும் அப்போதே முன்னெடுத்தவர் கலைஞர்.

வானுள்ளவரையும் வள்ளுவர் சிலை உள்ளவரையும் கலைஞர் புகழ் நிலைத்து நிற்கும். விவேகானந்தர் அமர்ந்த இடத்தில் அமர்ந்து அகில இந்திய அரசியலை நகர்த்த நினைக்கிறார்கள். ஒரு கோட்டுக்கு பக்கத்தில் அதை விட ஒரு பெரிய கோடு போட்டால் அது சின்னதாகிவிடும். அதைத்தான் செய்தார் கலைஞர். மோடி அங்கு அமர்ந்த போதும், சுற்றிச்சுற்றி புகைப்படம் எடுத்த போதும், வள்ளுவர் சிலைதான் தெரிகிறது. அச்சிலை கலைஞரின் பெயரைத்தான் உலகிற்கு சொல்கிறது. பெரியார் நினைவு சமத்துவபுரத்தை உருவாக்கியவர் கலைஞர். இதுதான் அவரின் கருத்தியலுக்கான உச்சம். வேறு யாரும் சிந்திக்காததை சிந்தித்தவர் கலைஞர்,’’ என்றார்.

ஜவாஹிருல்லா பேசும்போது, ‘‘இந்தியாவே தமிழகத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் நல்லாட்சி, நலத்திட்டங்கள் கொடுத்தவர் கலைஞர். சிறுபான்மையினர், இஸ்லாமியர்களுக்கு 3.5 இட ஒதுக்கீடு கொடுத்தவர். சிறுபான்மை மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். பத்திரிகைகளில் வரும் செய்தியினை கூர்ந்து கவனிபவர். தமிழ்நாட்டு மாநில நிதியை பறித்துக் கொள்ளும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. சமூகநீதியின் தொட்டிலாக தமிழ்நாடு உள்ளது. உயர் கல்வியை தமிழகத்தில் உயர்ந்த சிகரத்துக்கு கொண்டு சென்றவர் கலைஞர். பல துறைகளில் தமிழர் வாழ்வை உயர்த்தியவர். இந்தியாவில் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அதற்கு திராவிட இயக்கம்தான் காரணம். அதற்கு முக்கிய காரணம் கலைஞர்தான்,’’ என்றார்.

கி.வீரமணி பேசும்போது, ‘‘கலைஞர் தனது ஆட்சியை சமூக ஆட்சியாகவும், அரசியல் புரட்சியாகவும் நடத்தினார். திமுக வெறும் அரசியல் கட்சி அல்ல, இது ஒரு சமூகப் புரட்சி இயக்கம் மற்றும் சமூக பகுத்தறிவு இயக்கம். இந்தியா கூட்டணி உருவாவதற்கே அடித்தளமிட்டவர் தமிழ்நாடு முதல்வர். உழைப்பு… உழைப்பு… உழைப்பு… என கலைஞராலே பாராட்டு பெற்றவர் தமிழ்நாடு முதலமைச்சர்,’’ என்றார்.

The post அண்ணாவின் சீடர்களில் வலுவானவராக திகழ்ந்தவர் ஆட்சியில் இருந்துகொண்டே பெரியாரிய கருத்துகளை முன்னெடுத்தவர் கலைஞர்: நூற்றாண்டு நிறைவு வாழ்த்தரங்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் appeared first on Dinakaran.

Related Stories: