புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல், ஜூன் 2: மாஞ்சா நூல் கழுத்தறுத்து சாப்ட்வேர் இன்ஜினியர் படுகாயமடைந்தார். அவருக்கு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர் காந்தி நகர் காவேரி சாலையை சேர்ந்தவர் திலீப் குமார் (32). அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மதுரவாயல் – புழல் பைபாஸ் சாலை மேம்பாலத்திலிருந்து சைக்கிள் ஷாப் பகுதியில் கீழே இறங்கியபோது, காற்றாடி மாஞ்சா நூல் பறந்து வந்து இவர் மீது விழுந்ததில், கழுத்து மற்றும் கைகள் அறுபட்டு, படுகாயமடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்த இவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புழல் போலீசார் வழக்கு பதிந்து, தடையை மீறி மாஞ்சா நூல் காற்றாடி விட்டவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். சென்னையில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட போலீசார் தடை விதித்துள்ளனர். கடைகளுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளனர். ஆனால், அதை மீறி பலர் ஆன்லைனில் காற்றாடி, மாஞ்சா நூல் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவர்களால் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: