பாலியல் புகாரில் சிக்கி கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கலாஷேத்ரா நடன பள்ளியில் 1995-2001 வரை படித்த மாணவி ஒருவர், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்தார். அதன்பேரில், ஸ்ரீஜித் கிருஷ்ணாவை கடந்த மாதம் 22ம் தேதி நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஸ்ரீஜித் கிருஷ்ணா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ் செல்வி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், 28 ஆண்டுகளுக்கு முன் நடந்ததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் தற்போது மருத்துவ ரீதியாக எதையும் நிரூபிக்க முடியா. கைது செய்யப்பட்டதில் இருந்து ஸ்ரீஜித் கிருஷ்ணாவை இன்னும் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவில்லை. பல மாணவிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த மாணவியை தவிர யாரும் புகாரளிக்கவில்லை. அவருக்கு உள்ள நற்பெயரை கொடுக்க வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

புகாரளித்த பெண் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கினால் பாதிக்கப்பட்ட மற்றவர்கள் புகாரளிக்க முன்வரமாட்டார்கள் என தெரிவித்தார். காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு எதிராக மற்றொரு பெண்ணும் புகாரளித்துள்ளார். இன்னும் சிலர் புகாரளிக்க உள்ளனர் என்று கூறி ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டுமென்று ஜித் கிருஷ்ணாவுக்கு நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.

The post பாலியல் புகாரில் சிக்கி கைதான கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: