இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள், வாகனங்களை இடித்து சென்ற காரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்து பார்த்தபோது, காரை ஓட்டிவந்த நபர் மதுபோதையில் இருந்ததும், அவரது ஓட்டுநர் இருக்கையில் இருந்த காவலர் உடையில், ஸ்ரீராமதுரை என்ற பெயரும் எழுதப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், அவரிடம் போதையில் காரை இப்படி தாறுமாறாக ஓட்டுகிறீர்களே இது நியாயமா, குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டிய போலீசாராகிய நீங்களே இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடலாமா, உங்கள் செயலினால் உயிரிழப்புகள் ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
ஆனால், பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அளவிற்கு மதுபோதையில் இருந்த அவர், நான் மது அருந்தவிலலை, எந்த தப்பும் செய்யவில்லை என உளறினார். அதற்கு பொதுமக்கள் நீங்கள் குடித்துவிட்டு மதுபோதையில் ஓட்டியது தான் தப்பு என கூறியதற்கு, அவரால் எதுவும் பேச முடியவில்லை. இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடத்த காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதில், கண்ணகி நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ஸ்ரீராமதுரை, போதையில் கார் ஓட்டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீராமதுரையை ஆயுதப்படைக்கு மாற்றி, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
The post போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி நகர் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.