காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; ஒகேனக்கல்லில் நீர்வரத்து 35,000 கனஅடியாக அதிகரிப்பு.! பரிசல் இயக்க குளிக்க தடை

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று காலை 9,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. தொடர் மழையால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 8மணி நிலவரப்படி காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 9.30 மணியளவில் 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் பெருக் கெடுத்து செல்கிறது. அங்குள்ள மெயின்அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் காவிரியில் பரிசல் இயக்கவும் அருவிகளில் குளிக்கவும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. அணைக்கு நேற்று காலை 11,038 கனஅடியாக இருந்த நீர்வரத்து மாலையில் 9,644 கனஅடியாக சரிந்தது.

இரவு பெய்த மழையின் காரணமாக இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 20,626 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 8,000 கனஅடியிலிருந்து 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.71 அடியிலிருந்து 119.40 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.51 டி.எம்.சியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் இன்று பிற்பகல் மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டும் வாய்ப்பு உள்ளது.

Related Stories: