எறும்பூர் கிராமத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட நடவடிக்கை-பொதுமக்கள் வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடியிருப்புகளும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகளும் வசித்து வருகின்றனர். அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியும் இயங்கி வருகின்றது. எறும்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முதலாம் பராந்தக சோழனால் கட்டப்பட்ட கடம்பனேஸ்வரர் கோயில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஊரக வளர்ச்சி துறையால் பல லட்சம் நிதியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

தற்போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து வருகின்றது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் தூண்கள் சேதமடைந்து பில்லர் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு கடும் சேதமாகி வருகிறது. மேலும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு அதிகளவு தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள குளத்திற்கு சென்றடைகிறது.

இதனால் கடம்பேனஸ்வரர் கோயிலுக்கு வரும் சுற்றுபுற கிராம பக்தர்கள், விசேஷ நாட்களில் வருபவர்கள் அச்சத்துடனேயே வந்து செல்கின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சேதமடைந்த பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கட்டி தர வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: