வேலூர் மாநகரில் சுற்றுச்சூழலும் மாசடைகிறது; கொட்டி எரிக்கப்படும் குப்பைகளால் பாழாகும் பாலாறு: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் பாலாற்றில் தொடர்ந்து குப்பைகள் கொட்டி எரிக்கப்படுவதால் பாலாறு பாழாவதோடு, சுற்றுச்சூழலும் மாசடைகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வேலூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களின் குடிநீருக்கான முக்கிய ஆதாரமாக இருக்கும் பாலாறு, ஏற்கனவே பாலைவனமாகவும், புதர்கள் மண்டியும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளின் சாக்கடை நீரையும், கழிவு நீரையும் சுமக்கும் ஆறாகவும் பாழடைந்து பரிதாபமாக காட்சி அளித்த நிலையில் கடந்த ஆண்டு பெரும் வெள்ளப்பெருக்கை கண்டது. தொடர்ந்து அப்போது முதல் தண்ணீர் சென்று கொண்டுள்ளது பாலாற்றை நம்பியிருக்கும் மக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆனாலும், பாலாற்றை மாசுப்படுத்தும் காரியங்களுக்கு மட்டும் முற்றுப்புள்ளி விழுந்தபாடில்லை. தோல் தொழிற்சாலைகளும், ரசாயன ஆலைகளும் தொடர்ந்து தங்கள் கழிவுநீரை பாலாற்றில் விட்டு வருகின்றன. அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீரும், குப்பைகளும் கூட பாலாற்றிலேயே கொட்டப்படுவதுடன், எரிக்கப்படுகின்றன. குறிப்பாக வேலூர் மாநகரை இரண்டாக பிரித்து ஓடும் பாலாற்றின் இருகரை வழியாகவும் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும், மக்கா குப்பைகள் அனைத்தும் குவிக்கப்பட்டு எரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாலாற்றுப்படுகை மாசடைவது மட்டுமின்றி சுற்றுச்சூழலும் மாசடைகிறது.

இதுபற்றி நாளிதழ்களில் அவ்வபோது படங்களுடன் செய்திக்கட்டுரைகள் வெளியாகியும் வருகிறது. பொதுமக்கள் தரப்பில் இருந்தும், தன்னார்வலர்கள் தரப்பில் இருந்தும் மாவட்ட நிர்வாகத்துக்கு மட்டுமின்றி மாநகராட்சி, மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றுக்கும் புகார்கள் சென்றும் நடவடிக்கை என்பது இதுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.

இது ஒருபுறம் என்றால், பாலாற்றில் மணல் குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதி அளிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து பாலாற்றின் பாலங்களுக்கு மிக அருகில் திருட்டுத்தனமாக மணல் மாபியாக்கள் மணல் அள்ளி மூட்டைகளாக கட்டி புதர்களில் மறைத்து வைத்து இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோக்கள் மூலமும் எடுத்து செல்கின்றனர். இதனால் பாலாற்றின் போளூர் சுப்பிரமணியம் பாலம், புதிய அண்ணா பாலம் மற்றும் ரயில்வே பாலங்களின் அடித்தளம் பலவீனமடையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய அரசுத்துறைகளும் மவுனத்தையே கடைபிடித்து வருகின்றன.

எனவே, பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் அதனை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பாலாற்றை மாசுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாசு கட்டுப்பாடு வாரியம் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் நமது பாலாறு நமக்கு அவசியம் என்ற எண்ணம் பொதுமக்கள் மட்டுமின்றி உள்ளாட்சி நிர்வாகங்களுக்கும் வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Related Stories: