ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனங்கள் கூடாது: பிரச்னை ஏற்பட்டால் நிறுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் கூடாது என்றும், பிரச்னை ஏற்பட்டால் நிறுத்தலாம் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையின் எல்லைக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடக்கும் கோயில் திருவிழாக்களை முன்னிட்டு ஆடல், பாடல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதியும், போலீஸ் பாதுகாப்பும் வழங்கக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை நேற்று விசாரித்த நீதிபதி சத்திகுமார் சுகுமாரா குருப், ‘‘கோயில் திருவிழாக்களில் நடக்கும் ஆடல், பாடல் கலைநிகழ்ச்சிகளில் பாலுணர்வை தூண்டும் வகையிலான காட்சிகளோ, வசனங்களோ இருக்கக்கூடாது. ஆபாச நடனம் கூடாது. இரட்டை அர்த்த வாசகங்கள் இடம் பெறக் கூடாது. அரசியல் கட்சி, ஜாதி மற்றும் மதம் குறித்தோ, குறிப்பிட்ட சிலரை தாழ்த்தியோ எந்தவித வாசகங்களும் இடம் பெறக் கூடாது. அரசியல் கட்சி, ஜாதி மற்றும் மதம் சார்ந்து எந்தவித ப்ளக்ஸ் மற்றும் போர்டுகள் வைக்கக் கூடாது. பங்கேற்பாளர்கள் மது மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்ச்சியை முடிக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு சார்ந்த எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும், அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தான் பொறுப்பு. பிரச்னை ஏற்படும் போது போலீசார் தலையிட்டு உடனடியாக நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

* கபடிக்கும் கட்டுப்பாடு

இதேபோல் கபடி போட்டிகள் நடக்கும் போதும் மேற்கண்ட நிபந்தனைகளுடன் இரு மருத்துவர்கள் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள் இருக்க வேண்டும். வீரர்களின் உடையில் அரசியல் தலைவர்களின் படங்கள், சின்னங்கள், ஜாதி ரீதியிலான அடையாளங்கள் இருக்கக்கூடாது. ஜாதி ரீதியிலான பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: