மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை; 7 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி நெல் சாய்ந்தது.! நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான 7 ஆயிரம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்து உள்ளதால் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மாலை துவங்கி நள்ளிரவு வரை கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாடுதுறை, குத்தாலம், மணல்மேடு, செம்பனார்கோயில், சீர்காழி , கொள்ளிடம், தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக மணல்மேடு, குத்தாலம் பகுதியில் இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் வழக்கமான பரப்பளவை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன.

இதன் காரணமாக நெல் தரம் குறைவதுடன் அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் போது நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும் என்றும் இயந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர்.

Related Stories: