பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழியாக சென்னைக்கு அதிக ரயில்களை இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

அறந்தாங்கி: பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி, காரைக்குடி வழியாக சென்னைக்கு அதிகப்படியான ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பர்மா (தற்போதைய மியான்மர்) நாட்டில் காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட செட்டிநாட்டு பகுதிகளைச் சேர்ந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் பெரிய அளவில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் பொருள்களை கொண்டு செல்லவும், ஊர் வந்து சேரவும் தங்கள் பகுதிக்கு சென்னையில் இருந்து ரயில் வசதி செய்து தருமாறு ஆங்கிலேய அரசை வலியுறுத்தினர். நாட்டுக்கோட்டை நகரத்தாரின் தீவிர முயற்சியின் பலனாக ஆங்கிலேய அரசின் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக திருவாரூருக்கு மீட்டர் கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த ரயில் பாதையில் கடந்த 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில் வழித்தடத்தில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி சிக்ரி, அதிராம்பட்டினம் காதர்மொகைதீன் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகள் இருந்தன.

இந்த கல்வி நிலையங்களில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் இந்த வழித் தடத்தில் ஓடிய ரயில்களில் சென்று பாடம் படித்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் இருந்த மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகலரயில் பாதையாக மாற்றும் பணி கடந்த 2012ம் ஆண்டு தொடங்கியது. காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி இடையே 187 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில்பாதையை அகல ரயில் பாதையாக மாற்ற ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2012ம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது. இதனால் 1902ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி முதல் மீட்டர் கேஜ் ரயில் பாதையில் இயங்கிய ரயில், 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது.2012ம் ஆண்டு முதல் கட்டமாக காரைக்குடியில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில்பாதையாக மாற்றும் பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவுற்று, அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு அகல ரயில்பாதை பணிக்காக ரயில்கள் நிறுத்தும்போது இருந்ததை விட இந்த வழித்தடப்பகுதியில் ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, பேராவூரணி மற்றும் அறந்தாங்கியில் பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி உறுப்பு கல்லூரிகள், 20க்கும் மேற்பட்ட பொறியியல், கலைஅறிவியல், தொழில்நுட்ப கல்லூரிகள், ஏராளமான தனியார் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதவிர பல உயர்சிகிச்சை வசதி உடைய தனியார் மருத்துவமனைகளும் தொடங்கப்பட்டுள்ளன.மேலும் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, பேராவூரணி, அறந்தாங்கி, கண்டனூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் தினசரி தங்கள் பணி நிமித்தமாகவும், உயர் மருத்துவ சிகிச்சைக்காகவும் சென்னை சென்று வருகின்றனர்.இவர்கள் தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக கட்டணம் செலுத்தி சென்னை சென்று வருவதோடு, பஸ்களில் செல்வதால் பல்வேறு தொந்தரவுகளையும் அனுபவித்து வருகின்றனர்.எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை வரை மீட்டர் கேஜ் ரயில்பாதை அகல ரயில் பாதையாக மாற்றி, அந்த வழியில் ரயில்களை இயக்கும் வரை, பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி, அறந்தாங்கி, கண்டனூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் வழியாக சென்னைக்கு அதிகப்படியான ரயில்களை இயக்க வேண்டும். மேலும் மாணவ, மாணவியர் கல்லூரிகளுக்கு சென்றுவர இருமார்க்கங்களிலும் பயணிகள் ரயிலை இயக்க வேண்டும்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மீன், தேங்காய் உற்பத்தி முன்னணியில் உள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி, அறந்தாங்கி, கண்டனூர், காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட்டால், அந்த ரயில்களில் தேங்காய், மீன் உணவுகளை விரைவாக சென்னைக்கு அனுப்ப இயலும். இதனால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே தெற்கு ரயில்வே இப்பகுதியில் உள்ள மாணவ, மாணவியர், வணிகர்கள், பொதுமக்களின் நலன் கருதி, பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி, அறந்தாங்கி, கண்டனூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னைக்கு தற்போது குறைந்தபட்சம் தினசரி குறைந்தபட்சம் 4 ரயில்களையாவது இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மாணவ. மாணவியர், பொதுமக்கள், வணிகர்களின் கோரிக்கையாகும்.

Related Stories: