கிடா விருந்துக்கு வந்த போது சம்பவம்; காவிரியாற்றில் குளிக்க சென்ற ஐடி ஊழியர்கள் 2 பேர் மூழ்கினர்

கரூர்:கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் விஷ்ணு(25). அந்த பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் ஆதர்ஸ்(25), இவரும் மற்றொரு ஐடி கம்பெனியில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். நண்பர்கள் இருவரும், கல்லூரியில் உடன் படித்த நண்பர்களான சங்கர், நவீன்குமார், அஜித் ஆகிய 5 பேர்களும் மற்றொரு கல்லூரி நண்பரான சேலம் குளத்தூரை சேர்ந்த திவாகர் என்பவரின் குலதெய்வ கோயிலான கரூர் மாவட்டம் கடம்பங்குறிச்சியில் உள்ள பவுளியம்மன் கோயில் கிடா விருந்துக்கு வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம், விருந்துக்கு முன்னதாக, அருகில் உள்ள கடம்பங்குறிச்சி காவிரி ஆற்றில் குளிக்க நண்பர்கள் 5 பேரும் சென்றனர். அப்போது, ஆற்றில் முதலில் இறங்கிய ஆதர்ஸை திடீரென தண்ணீர் இழுத்து சென்றது. இதனை பார்த்த விஷ்ணு, ஆதர்ஸை காப்பாற்றும் நோக்கில் உள்ளே இறங்கினார். அவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது. இதனால், அதிர்ச்சியடைந்த மற்ற மூவரும், கரூர் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இருவரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வைகையாற்றில் குளித்த 2 வாலிபர்கள் மாயம்: மதுரை, தெற்கு வாசல், தில்லை நகர் சந்து தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் தனசேகரன் (23). எம்எஸ்சி பட்டதாரி. திருமங்கலத்தைச் சேர்ந்த ஞானமனி மகன் கண்ணன் (20). இருவரும் துவரிமானில் உள்ள முத்தையா சாமி கோயிலுக்கு நேற்று சாமி கும்பிட வந்தனர். அப்போது, துவரிமான் கிராமத்திலிருந்து பரவையை இணைக்கும் வகையில், கட்டப்பட்டுள்ள வைகை ஆற்றுப்பாலத்தின் கீழ் இருவரும் குளித்தனர். இதில், இருவரையும் தண்ணீர் இழுத்துச் சென்றது. அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories: