கண்டதேவி கோயில் திருவிழா சப்பரத்தில் சுவாமி, அம்பாள் உலா

தேவகோட்டை: கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் உடனாய பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆனி திருவிழாவை முன்னிட்டு சுவாமி மற்றும் அம்பாள் சப்பரத்தில் வீதி உலா வந்தனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவியில் ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் உடனாய பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட பிரச்னையாலும், புதுப்பிக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் பார்க்காததாலும் இக்கோயிலில் பல ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. இந்தாண்டு ஆனி திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருவிழாவையொட்டி தினமும் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. தேரோட்ட தினமான நேற்று தேர் ஓடாததால், சுவாமி மற்றும் அம்பாள் ஒரு சப்பரத்திலும், பரிவார தெய்வங்கள் இரண்டு சப்பரங்களிலும் கோயிலில் இருந்து புறப்பாடாகி வீதியுலா வந்தனர். இதில் கண்டதேவி, தேவகோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவகங்கை மாவட்ட ஏடிஎஸ்பி தலைமையில் 4 டிஎஸ்பிக்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 300 போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: