மாவட்டத்தில் 2ம் கட்டமாக நடைபெறும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: 526 கிராம ஊராட்சிகளில் 3 கட்டமாக 78 முகாம்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ம் கட்டமாக நடைபெறுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். 2ம் கட்டமாக ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்திட வேண்டுமென தமிழக அரசால் அறிவுரைகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகள் உள்ள 14 வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு உட்பட்டு வரும் கிராமங்களில் அரசு அறிவித்த நிபந்தனைகளின் படி முகாம்கள் நடத்திட வேண்டும்.

ஒவ்வொரு முகாமிற்கும் மொத்த மக்கள் தொகை 20 ஆயிரத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதிகபட்சம் 5 பஞ்சாயத்துக்களை இணைத்து முகாம் அமைக்க வேண்டும். ஒரு ஊராட்சியை ஒரே முகாமில் நடத்த வேண்டும். தனியாக பிரித்து நடத்தக் கூடாது. குறிப்பாக மக்கள் எளிதில் அணுகக்கூடிய இடத்தில் முகாம் நடத்தப்பட வேண்டும். மேற்காணும் நிபந்தனைகளின் படி திருவள்ளூர் மாவட்ட ஊரக பகுதிகளில் உள்ள வட்டார வளர்ச்சிப் பகுதிகளில் 2011 மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரு முகாமிற்கு 20 ஆயிரம் மக்கள் தொகை என கணக்கீடு செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்ட ஊரகப் பகுதிகளில் 3 கட்டமாக 78 முகாம்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்திட வேண்டும்.

அதன் அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் தர்மபுரி மாவட்டத்தில் ஜூலை 11ம் தேதி தொடங்கி வைப்பதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் துவக்கி வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சனி மற்றும் ஞாயிறு தவிர 15.7.2024 முதல் 24.7.2024 வரையில் நடக்க இருக்கிறது. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 28 ஊராட்சிகளில் 7 முகாம்களும், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 7 முகாம்களும், சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளில் 7 முகாம்களும், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 53 ஊராட்சிகளில் 6 முகாம்களும், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 13 ஊராட்சிகளில் 7 முகாம்களும் ஆக மொத்தம் 171 கிராம ஊராட்சிகளில் 32 முகாம்கள் நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து 2ம் கட்டமாக 25.7.2024 முதல் 05.08.2024 வரையில் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 55 ஊராட்சிகளில் 8 முகாம்களும், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 8 முகாம்களும், பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 49 ஊராட்சிகளில் 5 முகாம்களும், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 42 ஊராட்சிகளில் சனி மற்றும் ஞாயிறு தவிர 5 முகாம்களும், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 7 ஊராட்சிகளில் 25.7.2024 அன்று மட்டும் 1 முகாமும் ஆக மொத்தம் 214 ஊராட்சிகளில் 27 முகாம்கள் நடைபெற உள்ளது.

மேலும் 3ம் கட்டமாக சனி மற்றும் ஞாயிறு தவிர 6.8.2024 முதல் 11.8.2024 வரையில், ஆர்.கே பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 38 ஊராட்சிகளில் 5 முகாம்களும், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 43 ஊராட்சிகளில் 6.8.2024 முதல் 11.8.2024 வரையில் 6 முகாம்களும், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 33 ஊராட்சிகளில் 4 முகாம்களும் 6.8.2024 முதல் 9.8.2024 வரையிலும், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 27 ஊராட்சிகளில் 4 முகாம்களும், 6.8.2024 முதல் 9.8.2024 வரையிலும் என மொத்தம் 141 ஊராட்சிகளில் 19 முகாம்கள் நடைபெற உள்ளது.

ஆக மொத்தம் திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 526 கிராம ஊராட்சிகளில் மூன்று கட்டமாக 78 முகாம்கள் நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், கூடுதல் கலெக்டர் என்.ஓ.சுகபுத்ரா, உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ரமணன், தனித்துணை கலெக்டர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர் ஏ.கற்பகம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தனலட்சுமி, கலால் உதவி ஆணையர் ரங்கராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post மாவட்டத்தில் 2ம் கட்டமாக நடைபெறும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: 526 கிராம ஊராட்சிகளில் 3 கட்டமாக 78 முகாம்கள் appeared first on Dinakaran.

Related Stories: