காட்டு தேவத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்பின் பிடியில் 150 ஏக்கர் அரசு நிலம்; மீட்டு தர கிராமமக்கள் வலியுறுத்தல்

செய்யூர்: காட்டு தேவத்தூர் ஊராட்சியில் சுமார் 150 ஏக்கர் மதிப்பிலான அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். அதனை மீட்டு தர வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்தில் காட்டு தேவத்தூர் கிராமம் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த 60 வருடங்களுக்கு முன் கிராமத்தில் தேவ ஆதிஸ்வரர் கோயில் பகுதியை சுற்றி வீடுகள் கட்டி வசித்து வந்துள்ளனர்.  

அதன்பின், அப்பகுதியில் நெடுஞ்சாலை அமைவதையொட்டி கிராம மக்கள் பழைய குடியிருப்புகளை அகற்றிவிட்டு சாலையோரத்தில் வீடு கட்டி குடிபெயர்ந்தனர். கிராம மக்கள் விட்டு வந்த சுமார் 150 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் உள்ள சிலர், சிறிது சிறிதாக ஆக்கிரமித்தனர்.  அதன்பின், வெளியூர்களில் இருந்து வந்த தனி நபர்கள் மீதமுள்ள நிலங்களையும் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், இந்த நிலங்களை  பணம் கொடுத்து அதிகாரி மூலம் போலி பட்டாக்கள் தயாரித்து பட்டா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கோயில் பகுதி அருகே வனத்துறையினருக்கு சொந்தமான காடு உள்ளது.  தற்போது, இந்த காட்டு பகுதியையும் மர்ம நபர்கள் அழித்து, தங்களுக்கு சொந்தமாக்கி வருவதாக கிராம மக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத்திடம் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க  கோரி மனு அளித்துள்ளனர்.  அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: