பேச்சிப்பாறை அணையில் 950 கனஅடி உபரிநீர் திறப்பு திற்பரப்பு அருவியில் குளிக்க தடை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு

குலசேகரம்:  கனமழை மற்றும் பேச்சிப்பாறை அணையில் இருந்து 950 கனஅடி உபரிநீர் திறப்பு காரணமாக திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை காணப்படுகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய அணையான பேச்சிப்பாறை வேகமாக நிரம்பி வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் 48 அடி கொள்ளளவு கொண்ட அணை 45 அடியை கடந்தது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி வீதம் உபரிநீர் கோதையாற்றில் திறந்து விடப்பட்டது. கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த வாரம்தொடர்ச்சியாக 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மழை குறைந்ததால் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் குறைக்கப்பட்டது. இதனால் கடந்த வாரம் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் கடந்த இரு நாட்களாக மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. நேற்று மதியம் முதல் 950 கனஅடி வீதம் பேச்சிப்பாறை அணை மறுகால் ஷட்டர் மூலம் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே மழை காரணமாக கோதையாற்றில் அதிக தண்ணீர் வரத்து உள்ளது. இந்நிலையில் பேச்சிப்பாறை மறுகால் தண்ணீரும் சேர்ந்து வருவதால் திற்பரப்பு அருவி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று மதியம் முதல் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.16 அடியாக இருந்தது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 56.05 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து 304 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றம் இல்லை. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 26.82 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2 கன அடியாக இருந்தது. தண்ணீர் வெளியேற்றம் இல்லை. பொய்கை அணையின் நீர்மட்டம் 17.70 அடியாக காணப்பட்டது. அணைக்கு நீர் வரத்தும் இல்லை. நீர் வெளியேற்றமும் இல்லை. சிற்றார் - 1ல் 12.79 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. நீர் வரத்து வினாடிக்கு 45 கன அடியாக இருந்தது. நீர் வெளியேற்றம் இல்லை. சிற்றார் 2ல் நீர்மட்டம் 12.89 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 72 கன அடியாக இருந்தது. அணை மூடப்பட்டிருந்தது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

கேரளா- லட்சத்தீவு கடல் பகுதிகளில் இன்று வரை மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த கடல் காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும் இன்று தென் கிழக்கு அரபிக்கடல், அதனுடன் சேர்ந்த கன்னியாகுமரி கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, ெதன் தமிழ்நாடு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று மற்றும் மோசமான காலநிலையும் உள்ளது. எனவே இந்த பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: