மேட்டுப்பாளையத்தில் அறுவடைக்கு தயாரான 300 வாழைகளை துவம்சம் செய்த ‘பாகுபலி’ யானை

மேட்டுப்பாளையம்:  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள மலை கிராமங்களில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வெளியேறி விவசாய பயிர்களான வாழை, தென்னை, பாக்கு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்து வருகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் ஊமப்பாளையம், கிட்டாம்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லிமலை உள்ளிட்ட கிராமங்களில் கடந்த2   ஆண்டுகளாக பாகுபலி  யானை இரவு மற்றும் அதிகாலை நேரங்களில்  வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக ஊமப்பாளையம் கிராமத்தில் முகாமிட்ட பாகுபலி யானை அங்கு பயிரிட்டிருந்த வாழை, கரும்பு, தென்னை, உள்ளிட்ட பயிர்களை சேதம் செய்து வருகிறது.

ஊமப்பாளையத்தில் விவசாயி தங்கவேல் தோட்டத்தில் புகுந்த இந்த காட்டு யானை ஒரே இரவில் 300க்கும் மேற்பட்ட ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்களை முறித்து துவம்சம் செய்தது.  இதுதவிர தென்னை, பாக்கு உள்ளிட்ட மரங்களை அழித்து நாசம் செய்தது. இதன் மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய்வரை இருக்கும் என்று விவசாயி தெரிவித்தார். தொடர்ந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் பாகுபலி யானையை காட்டை விட்டு வெளியே வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சிறப்பு பயிற்சி பெற்ற வனத்துறை வீரர்களை இந்த பகுதியில் முகாமிட்டு பாகுபலி யானையை கண்காணிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை பாகுபலி யானை மனிதர்களை யாரையும் தாக்கியது இல்லை. ஆனால் மேட்டுப்பாளையம் சிறுமுகை காடுகளை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருவதால் யானை மீது விவசாயிகள் வெறுப்பில் உள்ளனர். பரவலாக நடந்து சென்று உணவுகளைத் தேடும் யானைகளை காட்டுக்குள் கட்டுப்படுத்தி வைப்பது என்பது வனத்துறைக்கு சவாலான காரியமாகவே உள்ளது. பாகுபலி யானையைப் பொருத்தவரை வனத்துறை எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த நிலைமையில் மனித- யானை மோதல் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவம் நடப்பதற்கு முன்பு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: