கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றில் விடும் விழா கோலாகலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

கரூர்: கரூர் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா கோலாகலமாக நடந்தது. கரூர் மாரியம்மன் கோயிலில் வைகாசி பெருவிழா கடந்த 8ம் தேதி துவங்கியது. பாலம்மாள்புரத்தில் இருந்து கம்பம் ஊர்வலமாக எடுத்து வந்து கோயிலில் நடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோயிலில் கம்பம் நட்ட நாள் முதல் தினமும் ஏராளமான பக்தர்கள் கோயிலில் கம்பத்திற்கு தண்ணீர், பால் ஊற்றி வழிபட்டனர்.  13ம் தேதி பூச்சொரிதல், 15ம் தேதி காப்பு கட்டுதல், 23ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் முக்கிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று காலை 11 மணியுடன் கம்பத்திற்கு தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது. அதன்பின் கோயிலை முழுமையாக சுத்தம் செய்து மாரியம்மன் மற்றும் கம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை செய்து வழிபட்டனர். மாலை 6 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜி, எம்பி ஜோதிமணி, மேயர் கவிதா கணேசன், எம்எல்ஏ மாணிக்கம், கோயில் அறங்காவலர் முத்துக்குமார், எஸ்பி சுந்தரவடிவேல் ஆகியோர் கம்பத்திற்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.

பின்னர் கோயிலில் நடப்பட்ட கம்பம் எடுத்து வரப்பட்டு கோயிலை ஒருமுறை சுற்றி ரதத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் ஊர்வலமாக  ஜவஹர் பஜாரில் இருந்து அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் விடப்பட்டது. கம்பம் செல்லும் வழியில் பக்தர்கள் கம்பத்திற்கு மலர் மாலை, பூக்களைத் தூவி வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வழியில் இஸ்லாமியர்கள் சிலர், பக்தர்களுக்கு நீர்மோர், குடிநீர் வழங்கினர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: