தாளவாடியில் இடியுடன் கனமழை விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது

சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் இடியுடன் கனமழை பெய்ததால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள தாளவாடி மலைப்பகுதியில் பரவலாக தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், திடீரென தாளவாடி, சூசையபுரம், திகினாரை, தொட்டகாஜனூர், மாதஹள்ளி, பாரதிபுரம், ராமாபுரம், சுவர்ணாவதி அணை, சிக்கோலா அணை  உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக, சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களில் மழைநீர் தேங்கியது. மேலும், சாலைகளில் உள்ள தரைப்பாலங்களிலும் மழைநீர் பாலத்தை மூழ்கடித்தபடி சென்றது. தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் விவசாய தோட்டங்களில் உள்ள கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மழையின் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதேபோல், சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சைபுளியம்பட்டி, பண்ணாரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது.

Related Stories: