வீட்டு வேலையில் அமர்த்தப்பட்ட வட மாநிலத்தை சேர்ந்த 2 சிறுமியிடம் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை: நடிகை மும்தாஜ் மீது வழக்கு?

அண்ணாநகர்: நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்த இரண்டு சிறுமிகளிடம் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்தியதையடுத்து, நடிகை மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது. பிரபல நடிகை மும்தாஜ். இவர், சென்னை அண்ணாநகர் எச்.பிளாக் பகுதியில் வசிக்கிறார். இவரது வீட்டில் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக வடமாநிலத்தை சேர்ந்த 2 சிறுமிகள் வேலை செய்துவந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், நேற்று ஒரு சிறுமி, வீட்டில் இருந்து வெளியே வந்து, ‘’தாங்கள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும். ஆனால் உரிமையாளர் அனுமதிக்கவில்லை, எங்களை கொடுமைப்படுத்துகிறார்’ என்று செல்போன் மூலம் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து அண்ணாநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சிறுமியை மீட்டு அண்ணாநகர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். இதில், வடமாநிலத்தை சேர்ந்த சிறுமிகள், நடிகை மும்தாஜ் வீட்டில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. சிறுமிகளிடம் அண்ணாநகர் போலீசார் விசாரித்துவிட்டு பின்னர் இருவரையும் சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்தநிலையில் இன்று காலை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், இரண்டு சிறுமி உட்பட இரண்டு பெண்களிடம்  விசாரணை நடத்தினர். குழந்தை தொழிலாளர்களாக வேலைக்கு சேர்ந்தார்களா, சிறுமிகளுக்கு வேறு ஏதாவது தொந்தரவு கொடுக்கப்பட்டதா என்று குழந்தைகள் நல வாரிய அதிகாரி ஷாலினி விசாரணை மேற்கொண்டு வருகின்றார். விசாரணைக்கு பின்பு நடிகை மும்தாஜ் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

Related Stories: