ஓரணியில் எதிர்க்கட்சிகள்; இடைவிடாது போராடும் மக்கள் ஆட்டம் காணும் ராஜபக்சே அரசு: ஆட்சியை கவிழ்க்க ‘கவுன்டவுன் ஸ்டார்ட்’; பாகிஸ்தானுக்கு அடுத்தது இலங்கையா?

இலங்கையில் அரசு வரிச் சலுகை அளித்ததன் மூலம் சுற்றுலா, ஏற்றுமதி மூலம் ஈட்டிய வருவாய் குறைந்தது. இதனால் அந்நிய செலாவணி பற்றாக்குறை ஏற்பட்டது. அத்தியாவசியமான பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்வதற்கு கூட அந்நிய செலாவணி இல்லாமல் சிக்கி தவித்தது. இதனால், பெட்ரோல், டீசல், காஸ், உயிர்காக்கும் மருந்துகள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விலை கிடுகிடுவென உயர்ந்தது. மறுபுறம், இவற்றை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதில், பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் இல்லாமல், மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளொன்றுக்கு ஏறக்குறைய 13 மணி மின்வெட்டு அமலில் உள்ளது. தெருக்கள் கூட இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மாணவர்கள் மெழுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம், உயிர்காக்கும் மருந்துகள் பற்றாக்குறையால் முக்கியமாக தேவைப்படும் அறுவை சிகிச்சைகளை மட்டுமே மேற்கொள்வதாகவும் இதே நிலை நீடித்தால் பல உயிரிழப்புகளை சந்திக்க கூடும் என்று இலங்கையின் தேசிய மருத்துவர்கள் கூட்டமைப்பு அரசுக்கு எழுதிய கடிதத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இது போன்ற சூழலினால், ஆத்திரமடைந்த மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி அதிபர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் ஆளும் கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டன. இதனால், 255 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு (டிஎன்ஏ), சமகி ஜன பலவிகயா (எஸ்ஜேபி) கட்சிகளுக்கு 64 எம்பி.க்கள் உள்ளனர். இக்கட்சிகள் ஆதரவை விலக்கி கொண்ட பின், ஆளும் கட்சியை சேர்ந்த 42 எம்பி.க்களும் கட்சியில் இருந்து விலகினர். இதனால், ராஜபக்சே அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், எதற்கும் அசையாத ராஜபக்சே குடும்பம் பதவி மீதான ஆசையில், எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்து கொள்ளலாம் என்ற பாணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுக்கு அழைப்பு விடுத்தது. கொரோனா தொற்றினால், சுற்றுலா, ஏற்றுமதி வருவாய் பாதித்ததே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று அரசு நொண்டி சாக்கு கூறி வருகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் தலைநகர் கொழும்புவில் காலி முனையில் வீதியில் இறங்கி போராடத் துவங்கி உள்ளனர். கடந்த சனிக்கிழமை அங்கு கூட துவங்கிய மக்கள் 4 நாட்களாக இரவு, பகல் பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்முறை போராட்டத்தில் குடும்பம் குடும்பமாக பங்கேற்று, அரசுக்கு எதிராக முழக்கமிட்டும், பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்கள் அமைப்பினர் காலி முனையில் கூடாரம் அமைத்து அரசுக்கு எதிராக சனிக்கிழமை முதல் கடந்த 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி, மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணாத அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக முக்கிய எதிர்கட்சியான எஸ்ஜேபி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரமேதாச அதிபருக்குள்ள அதிகாரங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். அதிகாரம் எம்பி.க்கள், நீதிமன்றம், அதிகாரிகளுக்கு பகிர்ந்து அளிக்கபட வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் செய்தி தொடர்பாளர் சுமந்திரன் கூறுகையில், ``எதிர்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைந்து அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம், கண்டன தீர்மானம் கொண்டு வர ஆதரவு திரட்டுவோம். எதனால் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டுமென்று மக்கள் வலியுறுத்துகின்றனர் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்,’’ என்று கூறினார். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் ஓராணியில் திரண்டு அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தும், சட்ட போராட்டம் நடத்தியும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதுபோல், இலங்கையில் எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருவதால் மகிந்தா ராஜபக்சே அரசுக்கான தொடங்கி உள்ளது.

* அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்கும் முயற்சி தோல்வி

அனைத்து கட்சியையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த இடைக்கால அரசை அமைக்கும் முயற்சியாக, கட்சியில் இருந்து விலகிய 42 எம்பி.க்களுடன் அதபிர் கோத்தபய பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், தங்களது 11 கோரிக்கைகளை ஏற்க அரசு இணங்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை தொடரும் என்று 42 அதிருப்தி எம்பி.க்களில் ஒருவரான வாசுதேவ நனயாக்கரா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை முன்னாள் அதிபர் மைத்ரி பால சிறிசேனா முன்னிலையில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். ஆனால், இந்த பேச்சுவார்த்தை எதுவும் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை.

Related Stories: