கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் 1101 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நித்திரவிளை ;  கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழாவில் 1101 குழந்தைகளுக்கு நேர்ச்சை தூக்கம் நடந்தது. குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடக்க நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்‌. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சையில் 1101 குழந்தைகளின் பெயர் பதிவு செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம் நேற்று நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை வழக்கமான பூஜைகள் முடிந்து தூக்ககாரர்கள் கோயில் வளாகத்தில் முட்டுகுத்தி நமஸ்காரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருள புண்ணிய புராதன பக்தி பரவசமூட்டும்  குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை சரண கோஷத்துடன்  தொடங்கியது. முதலில் நான்கு அம்மன் தூக்கம் நடைபெற்றது. தொடர்ந்து பெயர் பதிவு செய்த 1101  குழந்தைகளுக்கான நேர்ச்சை தூக்கம்,   அதை தொடர்ந்து 24 கூடுதல் தூக்கம் என 1129 தூக்க நேர்ச்சை நடைபெற்றது.

 தேரானது ஒரு முறை கோயிலை சுற்றி வரும் போது ஒரே நேரத்தில் நான்கு தூக்க நேர்ச்சை நடந்தது. அதன்படி தேரானது 283 முறை கோயிலை சுற்றி வந்தது. இதனிடையே தூக்ககாரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் கீழ்விளாகம் தறவாட்டில் இருந்து கச்சேரிநடை, கண்ணனாகம் சந்திப்பு வழியாக கோயிலை வந்தடைந்தது. காலை 6.30 மணிக்கு தொடங்கிய குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நள்ளிரவு வரை நடந்தது.

நெல்லை சரக டிஐஜி (பொறுப்பு) மயில்வாகனன், மாவட்ட எஸ்பி ஹரி கிரண் பிரசாத் விழாவில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தார். தமிழக, கேரள பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவிற்கு வருகை தந்திருந்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவம் உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. தமிழக, கேரள பகுதிகளில் இருந்து அரசு  போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.  அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Related Stories: