திருமழிசை பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் துணைத்தலைவர் பதவிக்கு நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் போதிய வார்டு உறுப்பினர்கள் வரவில்லை என்பதால் மீண்டும் இரண்டாவது முறையாக மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில், திமுக மற்றும் அதிமுக தலா 6 இடங்களிலும், மதிமுக, பாமக மற்றும் சுயேச்சை என தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். இதில் சுயேச்சை உறுப்பினர் அதிமுகவில் சீட் கிடைக்காமல் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுக சார்பில் உ.வடிவேலுவும், அதிமுக சார்பில் டி.எம்.ரமேசும் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுகவுக்கு 7 வாக்குகளும், அதிமுகவுக்கு 6 வாக்குகளும் போடப்பட்டிருந்தன. மேலும் 2 வாக்குகள் செல்லாத வாக்குகளாக போடப்பட்டிருந்தன.

திமுக சார்பில் போட்டியிட்ட உ.வடிவேலு 7 வாக்குகள் பெற்றதால் பேரூராட்சி தலைவராக வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்பட்டார். இதற்கு அதிமுக தரப்பு வார்டு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அன்றைய தினம் பிற்பகலில் நடைபெற இருந்த துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் பிரச்னை ஏற்படும் சூழ்நிலையிருந்ததால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து திருமழிசை பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிலையில், திமுக சார்பில் துணைத் தலைவர் பதவிக்கு 8வது வார்டு உறுப்பினர் ஜெ.மகாதேவனை திமுக தலைமை அறிவித்திருந்தது. இதில் திமுகவைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் உ.வடிவேலு உள்பட 7 வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வருகை தந்தனர். இதில் அதிமுக மற்றும் ஆதரவு வார்டு உறுப்பினர்கள் 8 பேர் கலந்துகொள்ளவில்லை. போதிய உறுப்பினர்கள் இல்லாததால் மீண்டும் மறுதேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories: