ஈர நிலத்துக்கான ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்ட சுசீந்திரம் குளத்தில் பிராந்தி, பிளாஸ்டிக் பாட்டில் குவியல்கள்

*இயற்கை ஆர்வலர்கள் வேதனை

நாகர்கோவில் : ஈர நிலத்துக்கான ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்ட சுசீந்திரம் குளத்தில் மது பாட்டில்களும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், குப்பைகள் குவிந்து கிடப்பது இயற்கை ஆர்வலர்களை வேதனை அடைய செய்துள்ளது.குமரி மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்கள் இருந்த நிலையில் படிப்படியாக சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்டு நீர் நிலைகளின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது உள்ள 2 ஆயிரம் குளங்களை முறைப்படி பாதுகாக்க வேண்டும் என்பது நீர்நிலை ஆர்வலர்களின் கோரிக்கை ஆகும். அந்த வகையில் தற்போது தமிழ்நாடு அரசு நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள குளங்கள் முறையாக சீரமைக்கப்பட்டு அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் நாகர்கோவிலில் மாநகராட்சி பராமரிப்பில் உள்ள சுப்பையார்குளம் சமீபத்தில் சீரமைக்கப்பட்டு, தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதே போல் மாவட்டத்தில் பல்வேறு குளங்கள் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

குமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதி ஆகும். இங்கு கடல் மற்றும் வனம், மலை சார்ந்த பகுதிகள் அதிகம் உள்ளன. இங்கு நிலப்பரப்பு குறைவு ஆகும். நீர் நிலைகள் நிறைந்த பகுதி ஆகும். எனவே இங்குள்ள நீர் நிலைகளுக்கு பறவைகள் வரத்தும் அதிகமாக உள்ளது. அந்த வகையில் சுசீந்திரம், தேரூர், வேம்பனூர் குளங்கள் பறவைகள் சரணாலய பகுதிகளாக உள்ளன. இந்த குளங்கள் ராம்சார் சாசனம் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் வேம்பனூர், சுசீந்திரம் குளம் பகுதிகள் ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த பகுதியில் உள்ள நீர் நிலைகளை அத்துமீறி மாசுப்படுத்துவது மிகப்பெரிய குற்றம் ஆகும். ஆனால் குமரி மாவட்டத்தில், பாதுகாக்கப்பட வேண்டிய நீர் நிலை பகுதிகள் மாசுப்படுத்தப்படுவதுடன், அழிக்கப்பட்டும் வருகிறது.

அந்த வகையில் ராம்சார் சாசன பகுதியான சுசீந்திரம் குளமும் மாசுப்படுத்தப்படுகிறது. குறிப்பாக மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்தும் பகுதியாக மாறி உள்ளது. இவ்வாறு மது
அருந்துபவர்கள் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை அப்படியே குளத்துக்குள் வீசி விட்டு சென்று விடுகிறார்கள். இந்த மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் குளத்துக்குள் குவிந்து கிடக்கின்றன. ஆகாய தாமரை ஒருபுறம் நிரம்பி கிடக்க, மது பாட்டில்களும், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் குவிந்து, குளத்தை மாசுபட வைக்கின்றன.

மேலும் இங்கு வந்து மது அருந்துபவர்கள், பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தீ வைப்பு சம்பவங்களிலும் ஈடுபடுகிறார்கள். இதனால் தற்போது பறவைகளின் வரத்தும் குறைந்து உள்ளதாக, பறவையின ஆர்வலர்கள் கூறி உள்ளனர். பரந்து விரிந்து காணப்படும் சுசீந்திரம் குளத்தின் ஒரு பகுதியில் மதுபாட்டில், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களும் குவிந்து கிடப்பது வன ஆர்வலர்கள் மற்றும் நீர் நிலை ஆதரவாளர்களை மிகவும் கவலை அடைய செய்துள்ளது.

எனவே பாதுகாக்கப்பட்ட பகுதியாக சுசீந்திரம் குளத்தை பாதுகாக்கும் வகையில் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் கரைகளில் அமர்ந்து மது அருந்துபவர்கள், தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கை ஆகும்.

ராம்சார் பகுதி என்றால் என்ன?

ராம்சார் பகுதி என்பது, ஈர நிலங்களின் பாதுகாப்பு ஆகும். ஈர நிலங்கள் மனித வாழ்வுக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். இவை உலகின் மிக கூடிய ஆக்க திறன் கொண்ட சூழல்களுள் அடங்குவன ஆகும். எண்ணற்ற தாவர, விலங்கினங்களின் வாழ்வுக்காக நீரையும், பிற வளங்களையும் வழங்கும் உயிரியற் பல்வகையின் தொட்டிலாக விளங்கும் பகுதியே ராம்சார் பகுதி என அழைக்கப்படுகிறது. ராம்சார் என்பது பன்னாட்டு தன்மையுடன் கூடிய ஒப்பந்தம் ஆகும்.

The post ஈர நிலத்துக்கான ராம்சார் பகுதியாக அறிவிக்கப்பட்ட சுசீந்திரம் குளத்தில் பிராந்தி, பிளாஸ்டிக் பாட்டில் குவியல்கள் appeared first on Dinakaran.

Related Stories: