அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி

*சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என பொதுமக்கள் பீதி

அம்பை : அம்பாசமுத்திரம் அருகே மர்ம வனவிலங்கு தாக்கியதில் நேற்று 2 மாடுகள் பலியானது. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருக்குமோ என்று பொதுமக்கள் பீதியுள்ளனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுத்தை, புலி, யானை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்குகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகிறது. இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

சமீபத்தில் விகேபுரம் அருகே வேம்பையாபுரம், அனவன்குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து பேச்சிமுத்து மற்றும் சங்கர் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை தூக்கிச் சென்றது. இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. இதையடுத்து மோப்பநாய் நெக்ஸ் உதவியுடன் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கண்டறியப்பட்ட பகுதியில் 4 கூண்டுகள் வைக்கப்பட்டது. அதன்பயனாக கடந்த 7 நாட்களில் 4 சிறுத்தை கூண்டில் சிக்கியது. இருப்பினும் அப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் அம்பை அருகே மணிமுத்தாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன். இவர் 10க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்த்து பராமரித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் தனது மாடுகளை அங்குள்ள அரசு உயர்நிலைபள்ளி பின்புறம் மலையடிவாரத்தில் உள்ள பொத்தையில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தார். பின்னர் வீடு திரும்பிய நிலையில் அவற்றில் 2 மாடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து சிவசுப்பிரமணியன் நேற்று அப்பகுதிக்கு தேடி சென்று பார்த்துள்ளார். அப்போது பொத்தை உச்சியின் மேல் பகுதியில் அவரது 2 மாடுகளும் ரத்த காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இறந்து கிடந்த மாடுகளை பார்த்த போது ஒரு மாட்டின் உடலில் ஏதோ காட்டுவிலங்கு தாக்கியதற்குண்டான நக கீறல்கள் இருந்துள்ளது. மற்றொரு மாட்டின் வால் பகுதி துண்டாகி இருந்துள்ளது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் மர்மமான முறையில் மாடுகள் இறந்ததை அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். எனவே வனப்பகுதியில் விடப்பட்ட சிறுத்தைகள் மீண்டும் கீழ் இறங்கி மக்கள் வசிக்கும் பகுதியில் வந்து மாடுகளை தாக்கி உள்ளதா என பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பதுடன், சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அம்பை அருகே மணிமுத்தாறில் பரபரப்பு மர்ம வனவிலங்கு தாக்கி 2 மாடுகள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: