தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோபி : தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். குறைந்த அளவில் விழுந்த நீரில் குளித்து மகிழ்ந்தனர்.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொடிவேரி அணையானது பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அணையாகும். 15 அடி உயரத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு அருவிபோல் தண்ணீர் கொட்டுவதாலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க முடியும் என்பதாலும், ஈரோடு மாவட்டத்திலிருந்து மட்டுமின்றி கோவை, திருப்பூர், மதுரை, சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மற்றும் கர்நாடக மாநிலம் மைசூர், பெங்களுர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஒவ்வொரு அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வருகின்றனர்.

கடந்த, ஒரு மாத காலமாக இந்த அணைக்கு நாள்தோறும் 10 ஆயிரத்திறகும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். தொடர்ந்து, அவர்கள் வசதிக்காக அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாத காலமாக அருவிபோல் கொட்டிய அணை தண்ணீரில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் வந்து சென்றனர். இந்நிலையில், பவானி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இதனால், நேற்று கொடிவேரி அணையில் மிக குறைந்த அளவே தண்ணீர் வெளியேறியது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அணை நீரில் முழுமையாக குளிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். ஒரு சில இடங்களில், குறைந்த அளவே கொட்டிய தண்ணீரில் குளித்தும், அணையின் மேல் பகுதியில் உற்சாகமாக பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர். சிலர் தண்ணீர் குறைவாக விழுந்ததால் திரும்பிச் சென்றனர்.

கோடை விடுமுறை முடிய சில நாட்களே உள்ள நிலையில் கொடிவேரி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால், அணைக்கு வருபவர்களை, கடத்தூர் மற்றும் பங்களா புதூர் காவல்துறையினரும், ஊர்க்காவல் படையினரும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வருகின்றனர். மது அருந்தி வருபவர்கள் திருப்பி அனுப்பி வைத்தும், அவர்களது உடமைகள் முழுமையாக சோதனை செய்த பின்னரே கொடிவேரி அணைக்குள் அனுமதிக்கின்றனர். அதேபோன்று, அணையில் குளிக்கும் இடங்களிலும் பெண் காவலர்கள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் குளித்து செல்கின்றனர்.

The post தண்ணீர் நிறுத்தப்பட்டதால் கொடிவேரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: