குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் டிரை சைக்கிள் மீது கார் மோதி மூவர் பலி

*காரில் வந்தவர்கள் உள்பட 4 பேர் படுகாயம்

குளத்தூர் : குளத்தூர் அருகே சூரங்குடி கிழக்கு கடற்கரை சாலையில் டிரை சைக்கிள் மீது கார் மோதி 3பேர் பரிதாபமாக பலியாகினர். காரில் வந்தவர்கள் உள்பட 4 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ரெங்கன் மகன் சிலம்பரசன்(35). இவர் குடும்பத்துடன் டிரை சைக்கிளில் ஊர் ஊராக சென்று பழைய பேப்பர், அட்டை மற்றும் பிளஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை தூத்துக்குடியில் உள்ள பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை சிலம்பரசன், அவரது மனைவி தங்கம்மாள்(35), அவரது உறவினர் ஆறுமுகம் மனைவி மாரியம்மாள்(60), முருகன் மகன் சதீஷ்(7) ஆகியோர் டிரை சைக்கிளில் சூரங்குடி அருகே உள்ள கீழசண்முகபுரம் கிராமத்தில் பழைய பேப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அட்டைகளை சேகரித்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையை கடந்துள்ளனர்.

அப்போது அந்த வழியாக வந்த கார், சிலம்பரசன் ஓட்டி வந்த டிரை சைக்கிளில் மோதி 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்று, சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிலம்பரசன் மனைவி தங்கம்மாள், சிறுவன் சதீஷ், உறவினர் மாரியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். டிரை சைக்கிளை ஓட்டிச் சென்ற சிலம்பரசன், காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் குலவேளையைச் சேர்ந்த செல்வராஜ்(55), அவரது மனைவி குமரிதங்கம்(49) மற்றும் காரை ஓட்டி வந்த அவரது மகன் ஜெனிட்(29) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த சூரங்குடி போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து நடந்த இடத்தில் விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். விபத்து குறித்து சூரங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை தடுக்க வேகத்தடை

விபத்து நடந்த மேல சண்முகபுரம் பகுதியில் வேகத்தடை அமைக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அங்கு வேகத்தடை அமைக்கப்படாத நிலையில் திடீரென நேற்று நடந்த விபத்தில் 3 பேர் பலியானது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடிக்கடி அப்பகுதியில் நடக்கும் சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக விரைவாக அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் டிரை சைக்கிள் மீது கார் மோதி மூவர் பலி appeared first on Dinakaran.

Related Stories: