பள்ளி திறப்பதை முன்னிட்டு சீருடைகள், புத்தக பை, ஷூ விற்பனைக்கு குவிப்பு

ஈரோடு : ஈரோட்டில் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு மாணவ,மாணவிகளின் சீருடைகள், புத்தகப் பை, ஷூ விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஜூன் மாதம் 5ம் தேதியுடன் நிறைவடைந்து, ஒரே கட்டமாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் துவங்கப்படும், என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், அன்றைய தினமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாட புத்தகங்கள், நோட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் திறப்பை முன்னிட்டு ஈரோடு கடை வீதி, பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்கேவி சாலை, நேதாஜி சாலை ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக ரெடிமேடு சீருடைகள், புத்தக பை, காலணி, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.

இதனையொட்டி, மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோருடன் நேற்று கடை வீதிகளுக்கு வந்து அவர்களுக்கு தேவையான சீருடைகளை ரெடிமேடாகவும், துணிகளாகவும் வாங்கி சென்றனர். இதேபோல், அவர்களுக்கு பிடித்த புத்தக பை, ஷூ, தண்ணீர் பாட்டில் ஆகியவற்றையும் தேர்வு செய்து வாங்கி சென்றனர்.இதுகுறித்து பள்ளி சீருடை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறியதாவது:

நாங்கள் சீருடை துணிகளை மொத்தமாக கொள்முதல் செய்து, ஈரோடு, திருப்பூர் பகுதியில் உள்ள கார்மென்ட்ஸ்களில் தைத்து ரெடிமேடு சீருடைகளை விற்பனைக்கு தயார் நிலையில் வைத்துள்ளோம். இதில், அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே சீருடைகளை இலவசமாக வழங்குவதால், அந்த வகுப்புகளுக்கு குறைந்தளவிலும், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மட்டும் அதிகளவில் ரெடிமேடு சீருடைகளை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளோம். ஒரு செட் சீருடை ரூ.500 முதல் விற்பனைக்கு உள்ளது.

பள்ளி திறப்பதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சீருடை விற்பனை கணிசமாக அதிகரிக்க துவங்கியுள்ளது. வரக்கூடிய நாட்களில் விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

The post பள்ளி திறப்பதை முன்னிட்டு சீருடைகள், புத்தக பை, ஷூ விற்பனைக்கு குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: