மாத உதவித்தொகை உயர்த்தக்கோரி போராட்டம் நடத்த முயன்ற 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

சென்னை: மாநிலம் முழுவதும் தற்போது மாற்றுத்திறளாளிகளுக்கு மாதம் ரூ.1000 உதவிதொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், சாதாரண மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரமும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை தற்போது நடைபெறும்பேரவைக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமை செயலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதிலும் இருந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னை நோக்கி மாற்றுத்திறனாளிகள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் புறப்பட்டனர். அனைவரையும் போலீசார் சென்னை புறநகர் பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசாரின் தடையை மீறி நேற்று அதிகாலை கோயம்பேடு பேருந்து நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையம் பகுதியில் கைதானவர்கள் மாநகராட்சி சமுதாய நல கூடத்தில் அடைத்தனர். பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில நிர்வாகி பாரதிஅண்ணன் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் வாலாஜா சாலையில் இருந்து தலைமை செயலகம் நோக்கி பேரணியாக போராட்டம் நடத்த சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தை தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Related Stories: