கடற்கரைகளில் சவாரிக்கு பயன்படுத்தும் குதிரைகளுக்கு சிப் உரிமம் கட்டாயம்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, பிப்.21: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்காக குதிரை சவாரி பயன்பாடில் உள்ளது. இவ்வாறு பயன்படுத்தப்படும் குதிரைகள் சரிவர பராமரிக்கப்படாமலும், உரிய இருப்பிட வசதி, தீவனம், குடிநீர் அளிக்கப்படாமல் துன்புறுத்தப்படுவதாக புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தின் கோரிக்கையின்படி குதிரைகள், கழுதைகள் ஆகியவற்றின் உரிமையாளர்கள் உள்ளாட்சி நிர்வாகங்களிடமிருந்து உரிமம் பெற வேண்டும் மற்றும் தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்திடம் பதிவு செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குதிரைகள் மற்றும் கழுதைகளின் உரிமையாளர்கள் அவற்றுக்கு அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்தி பதிவு பெற்ற கால்நடை மருத்துவரிடம் உடற்தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குதிரைகளை பகல் 10 மணி முதல் 4 பயன்படுத்தக்கூடாது எனவும், ஒவ்வொரு குதிரைக்கும் தலா 144 சதுர அடி (12 அடி நீளம் மற்றும் 12 அடி அகலம்) இடவசதி உள்ள கொட்டில்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, சவாரி குதிரைகள் வளர்ப்பினை முறைபடுத்தவும், குதிரைகள் துன்புறுத்தப்படுவதை கட்டுபடுத்தவும் சென்னை மாநகராட்சி பகுதிகளில் வளர்க்கப்படும் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் வழங்கவும், இதற்கென சென்னை மாநகராட்சியின் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதியும், உரிமம் வழங்கப்படும் போது குதிரைகளுக்கு மைக்ரோசிப் செலுத்துவதற்கும், உரிமம் பெறுவதற்காக 45 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டு 28.3.2026க்குள் குதிரைகளின் உரிமையாளர்களுக்கு உரிமம் பெற காலக்கெடு அளிக்கவும் 29.3.2026 முதல் உரிமம் பெறாத குதிரைகளை சவாரிக்கு பயன்படுத்துவதை காவல்துறையினரின் பங்கேற்புடன் தடை செய்வதற்கும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: