16 ஆண்டு கால இழுபறிக்கு பிறகு பரங்கிமலை – வேளச்சேரி ரயில் சேவை மார்ச் 10ல் தொடக்கம்

சென்னை, பிப்.27: பரங்கிமலை – வேளச்சேரி ரயில் சேவை, மார்ச் 10ல் இயக்கப்பட உள்ளது. இதன்காரணமாக, எழும்பூர் – தாம்பரம் இடையேயான நெரிசல் குறையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும், பறக்கும் ரயில் திட்டம் 1985ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. சென்னை கடற்கரை முதல், வேளச்சேரி வழியாக பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக 1997ம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு ₹266 கோடியில் அமைக்கப்பட்டது.

இரண்டாம் கட்டமாக ₹877.59 கோடியில் மயிலாப்பூர் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007ம் ஆண்டு முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 3ம் கட்டமாக 2008ம் ஆண்டு ₹495 கோடியில் வேளச்சேரி முதல் பரங்கிமலை இடையே பணிகள் தொடங்கியது. மொத்தம் 5 கிலோ மீட்டர் தூரத்தில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியுள்ள அரை கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகள் மட்டும் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

திட்டமிட்டப்படி பணிகள் 2010ல் முடியாததால் இதற்கான திட்ட மதிப்பீடு உயர்ந்தது. அதனை தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் மூலம் தீர்வுகாணப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கு முன்னதாகவே புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. இங்கு ரயில் பாதை சிக்னல் கட்டமைப்புகளும் முடிவடைந்தன. பணிகள் எஞ்சியுள்ள பகுதியில் தூண்கள் அமைத்து, அதற்குமேல் பாதைகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்றன.

அப்போது அங்கு அமைக்கப்பட்ட தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரயில் பாலம் திடீரென சரிந்து பாரம் தாங்காமல் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. அதன்படி பல்வேறு பிரச்னைகள் மற்றும் போராட்டங்களுக்கு பிறகு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகள் 16 ஆண்டுகளுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து, சிக்னல், ரயில் நிலைய பராமரிப்பு பணிகள், சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், வேளச்சேரி – பரங்கிமலை இடையே மார்ச் 10ம் தேதி ரயில் சேவை தொடங்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கடற்கரை – சென்னை பூங்கா ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பரங்கிமலை – வேளச்சேரி இடையேயான புதிய பாதையில் மார்ச் 10ம் தேதி ரயில்கள் இயக்கப்படும். இந்த புதிய பாதை தற்போதுள்ள நெரிசலை குறைக்கும். மேலும், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நெரிசலை குறைக்கும் வகையில் கூடுதல் பேருந்துகள் வரும் 28ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரை இடையே கிண்டி, அண்ணா சாலை, சேப்பாக்கம், தலைமைச் செயலகம் வழியாக காலை 6 மணி 30 நிமிடம் முதல் 8 மணி 43 நிமிடம் வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இதே மார்க்கத்தில் கிண்டி, தி.நகர், எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை இடையே காலை 6 மணி 51 நிமிடம் முதல் 8 மணி 36 நிமிடம் வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் 20 பேருந்துகள் இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோன்று சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே தலைமைச் செயலகம், சேப்பாக்கம், அண்ணா சாலை, கிண்டி வழியே மாலை 5 மணி முதல் இரவு 9 மணி 13 நிமிடம் வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் பாரிமுனை, சென்னை சென்ட்ரல், எழும்பூர், தி.நகர், கிண்டி வழியாக மாலை 5 மணி 21 நிமிடம் முதல் இரவு 7 மணி 6 நிமிடம் வரை குறிப்பிட்ட இடைவெளிகளில் 20 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் பயணச் சீட்டு, மாதாந்திர பயண அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.

Related Stories: