ஜெயலலிதா பிறந்தநாள் விழா அதிமுகவினர் இடையே மோதல்

பெரம்பூர், பிப்.26: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் லட்டு கொடுப்பதில் அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. கொளத்தூர் கம்பர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ்(54), ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். மேலும் இவர் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் தனது நண்பர் வெங்கடேஷ் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கொளத்தூர் ஜிகேஎம் காலனி 35வது தெருவில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அதிமுக கட்சியின் அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் ஆகியோர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு லட்டு கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது துரைராஜ் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் வெங்கடேசன் என்பவர் லட்டை வாங்கும்போது லட்டு எதிர்பாராத விதமாக கீழே விழுந்துவிட்டது. அப்போது பழனி மற்றும் சரவணன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென துரைராஜை சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து, துரைராஜ் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதேபோல், அதிமுக அம்மா பேரவை இணைச் செயலாளர் பழனி என்பவரும் துரைராஜ் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பு புகார்கள் குறித்து கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: