ஜனாதிபதி ஊரிலேயே அவருக்கு அனுமதியில்லை தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடலாம்

ஆலந்தூர், பிப்.26: ஜனாதிபதி ஊரிலேயே உள்ள கோயிலில் அவரை அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு சென்று சாமி கும்பிடலாம் என ஜெகத்ரட்சகன் எம்.பி கூறினார். சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில், தமிழ்நாடு தலை குனியாது என்ற தலைப்பில் திராவிட மாடல் நல்லாட்சியில் 5 ஆண்டு கால சாதனைகள் விளக்க தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சென்னை-சோழிங்கநல்லூர் பிரதான சாலையில் நடந்தது. கூட்டத்திற்கு சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், மதியழகன், பாலவாக்கம் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திமுக கொள்கை பரப்பு செயலாளரும் எம்.பி.யுமான ஜெகத்ரட்சகன் கலந்து கொண்டு திமுக அரசின் சாதனைகளை விளக்கினார்.

அப்போது ஜெகத்ரட்சகன் எம்பி பேசுகையில், கொரோனா என்னும் கொடிய நோய் பரவி வந்த நேரத்தில் ஆட்சிக்கு வந்தோம். தமிழ்நாடு முதலமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆகியோர் எடுத்த நடவடிக்கையால் முதலில் உயிர்காக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திராவிட மாடல் அரசு எனும் பெருமிதத்துடன் மனிதாபிமான தாய் மற்றும் தந்தை இல்லா குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், கல்வியில் சிறக்க காலையில் சிற்றுண்டி, தூய்மை பணியாளர்களுக்கும் மதிய உணவு, தமிழகத்தில் ஊர் பெயரில் ஜாதி கூடாது, காலனி எனும் சொல் அகற்றம் செய்து நமது முதல்வர் நல்லாட்சி செய்து வருகிறார். ஆனால் வடமாநிலங்களில் இன்றளவும் ஜாதி மறுப்பு திருமணம் செய்தால், அந்த ஜோடியை சித்திரவதை செய்து ரசிக்கும் மனநிலை நீடிக்கிறது.

ஜனாதிபதி ஊரிலேயே உள்ள கோயிலில் அவரை அனுமதிக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி ரூ.5 ஆயிரம் கோடியில் கட்டிய கோயிலில் கருவறைக்கு செல்ல முடியல. ஆனால் தமிழகம் அப்படி இல்லை, இங்கு யார் வேண்டுமானாலும் கோயிலுக்கு போகலாம், சாமி கும்பிடலாம். அதனால் மோடி அவர்களே தமிழ்நாடு வாங்க, சோழிங்கநல்லூரில் தனது தொகுதியை அரவிந்த் ரமேஷ் மண்ணை பொன்னாக்கி வைத்துள்ளார் என இவ்வாறு பேசினார். பின்னர் அரவிந்த் ரமேஷ் எம்எல்ஏ முன்னிலையில் 7000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஜெகத்ரட்சகன் எம்பி வழங்கினார். இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபாகராஜா காரம்பாக்கம் கணபதி, பொதுக்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, பாலவாக்கம் சோமு, ஹரி கிருஷ்ணன், கவுன்சிலர்கள் தேவராஜ் ஜெ.கே.மணிகண்டன் ஷர்மிளா திவாகர், ஷெர்லி ஜெய், பள்ளிக்கரணை பாபு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Related Stories: