சென்னை புறநகர் ரயில் சேவை மாற்றத்தால் கடும் பாதிப்பு ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் அடுத்தடுத்து வந்ததால் பரபரப்பு: பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் கடும் அவதி

சென்னை, பிப்.21: சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்ததால், பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11வது நடைமேடைகளில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. இதனால், நேற்று முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு கடற்கரை – தாம்பரம் இடையிலான புறநகர் ரயில் சேவை குறைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

வழக்கமான சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 204 சேவைகள் 164 சேவைகளாக குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் பணிக்கு செல்லக்கூடிய நேரத்தில் 8 நிமிடங்களுக்கு பதிலாக, 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே குறிப்பிட்டுள்ளது. இதனால், பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது போதாது என்று சிக்னல் கோளாறு காரணமாகவும் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்பட்ட புறநகர் ரயில்கள் நேற்று ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதில், குறிப்பாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளுக்காக, முறையான மாற்றுத் திட்டங்கள் ஏதுமின்றி மின்சார ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக கூறி, ரயில் பயணிகள் தெற்கு ரயில்வே நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அடுத்த 45 நாட்களுக்கு நாங்கள் எப்படி அலுவலகம் செல்வது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதலே ரயில் நிலையங்களில் குவிந்த பயணிகள், ரயில்வே நிர்வாகத்தின் திடீர் மாற்றங்களால் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து பேசிய பெண் பயணி ஒருவர், ‘நாங்கள் செங்கல்பட்டிலிருந்து வருகிறோம். செங்கல்பட்டிலிருந்து சென்னைக்குள் வர ஏற்கனவே 2.30 மணி நேரமாகிறது. அதிலும், பீக் ஹவர்ஸில் அரை மணி நேரத்திற்கு ஒரு ரயில் தான் இயக்கப்படுகிறது என்றால், நாங்கள் எப்படி நேரத்திற்கு அலுவலகம் செல்ல முடியும். அதுவும் எழும்பூர் வரை மட்டுமே ரயில் என்கிறார்கள். அங்கிருந்து கடற்கரை செல்ல மீண்டும் பேருந்து ஏற வேண்டுமா. 45 நாட்களும் இந்த நரக வேதனையை அனுபவிக்க வேண்டுமா,’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

வேலை நாட்களில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையை பின்பற்றுவது பயணிகளை வஞ்சிக்கும் செயல் என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து பேசிய மற்றொரு பயணி, ‘கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் ரயில்களை இயக்க வேண்டிய நேரத்தில், சேவையை சுருக்கியது ஏன் என்று புரியவில்லை. இருக்கும் ரயில்களையாவது குறித்த நேரத்தில் இயக்க வேண்டும். ஆனால், ரயில்வே நிர்வாகம் அதிலும் கோட்டை விடுகிறது. இது முழுக்க முழுக்க பயணிகளின் நேரத்தை வீணடிக்கும் செயல்,’ என்று வேதனை தெரிவித்தார்.

குறிப்பாக, சேவை மாற்றப்பட்ட முதல் நாளே கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெரும் குழப்பம் நிலவியது. ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 2 ரயில்கள் வந்ததால், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னால் வந்த ரயில் நடைமேடைக்கு வராமல் பாதியிலேயே நின்றது. இதனால் பயணிகள் வேறு வழியின்றி தண்டவாளத்தில் குதித்து சென்றனர். புதிய நேர அட்டவணை அமலுக்கு வந்த முதல் நாளிலேயே, ரயில்வேயின் சிக்னல் மற்றும் கட்டுப்பாட்டு அறை எவ்வளவு அலட்சியமாகச் செயல்படுகிறது என்பது கோடம்பாக்கத்தில் அம்பலமாகியுள்ளது. ஒரே தண்டவாளத்தில், மிகக் குறைந்த இடைவெளியில் 2 ரயில்களை அனுமதித்தது எப்படி, தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில், இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாடு நிகழ்ந்தது என்று பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நடைமேடை கிடைக்காமல் தண்டவாளத்திலேயே ரயில் நின்றதால், பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே குதித்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரி பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் ரயிலில் இருந்து கீழே குதித்தனர். ஒரு சிலர் குதிக்கும்போது தண்டவாளத்தில் விழுந்தனர். ஒருவேளை அந்நேரத்தில் விபத்து நேர்ந்திருந்தால் ரயில்வே நிர்வாகம் என்ன பதில் சொல்லியிருக்கும். என்று அப்பெண்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ரயில் சேவை குறைப்பு காரணமாக ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க, 50 அரசுப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை பயன்படுத்தி பயணிகள் பயணம் செய்தனர். அதே சமயம் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் வழித்தடத்தில் வெறும் 50 பேருந்துகள் என்பது போதவில்லை என்று தெரிவித்துள்ளனர். வளர்ச்சிப் பணிகள் அவசியம் தான். ஆனால், அதற்காகப் பொதுமக்களை நடுத்தெருவில் நிற்க வைப்பது சரியல்ல. உடனடியாக அலுவலக நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும். ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும். கோடம்பாக்கத்தில் நடந்தது போன்ற பாதுகாப்பு குளறுபடிகள் நடக்காததை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், என்பதே அனைத்துத் தரப்பு பயணிகளின் ஒற்றைக் குரலாக உள்ளது.

Related Stories: