சென்னை, பிப்.25: சென்னை ரேஸ் கிளப்பிடம் இருந்து 6 கோடியே 43 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ரேஸ் கிளப்பிற்கு சொந்தமான 11 சொத்துக்களுக்கான சொத்து வரி பாக்கி தொகை 6 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரத்து 970 ரூபாயை செலுத்துமாறு, பிப்ரவரி 6ம் தேதி மாநகராட்சி தரப்பில் ரேஸ் கிளப்பிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கடந்த 2001-2002 முதல் 2007-2008ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி பாக்கியை செலுத்துமாறு கூறப்பட்டிருந்து. அந்த நோட்டீசை எதிர்த்து சென்னை ரேஸ் கிளப் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சொத்து வரி பாக்கி வசூலிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பு தங்கள் தரப்பு ஆட்சேபங்களை கேட்கவில்லை என்று ரேஸ் கிளப் தரப்பில் வாதிடப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ரேஸ் கிளப்பிடம் சொத்துவரி பாக்கி வசூல் செய்யும் நடவடிக்கைகளை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறும் சென்னை மாநகராட்சிக்கு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.
