பெண் பலாத்காரம் பற்றி புகார் செய்த கம்யூனிஸ்ட் நிர்வாகியை கொன்ற கந்துவட்டி கும்பலுக்கு ஆயுள் சிறை: 12 ஆண்டுக்குப்பின் நாமக்கல் கோர்ட் தீர்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (40). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளராக இருந்தார். இதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சிவக்குமார் என்பவரிடம் கந்துவட்டிக்கு பணம் கடனாக வாங்கியிருந்தார். தவணை பணத்தைச் செலுத்த சென்ற அந்த பெண்ணை, கந்துவட்டி கும்பலை சேர்ந்த சிலர் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்தனர்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்கு உதவியாக கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுசாமி, பள்ளிபாளையம் போலீசில் கடந்த 10.3.2010 இரவு புகார் அளித்தார். புகார் அளித்து விட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது, கந்துவட்டி கும்பலை சேர்ந்த 7 பேர், வேலுசாமியை வழிமறித்து வெட்டிக்கொலை செய்தனர். பள்ளிபாளையம் போலீசாரிடமிருந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதில் தொடர்புடைய அக்ரஹாரம் பகுதியை ஆமையன் என்ற ரவியை போலீசார் கைது செய்தனர். மற்ற 6 பேரும் வெவ்வேறு நீதிமன்றங்களில் சரண் அடைந்தனர்.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து, சிபிசிஐடி போலீசார் நாமக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கு விசாரணையின் போது, ஆமையன் என்ற ரவி அப்ரூவராக மாறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்துவட்டி கும்பல் அவரையும் வெட்டிக் கொலை செய்தது.

இந்த வழக்கில் தொடர்புடைய பூபதி என்பவர் ஜாமீனில் வெளிவந்த பின்னர், கடந்த 2017 முதல் தலைமறைவாகிவிட்டார். கம்யூனிஸ்ட் பிரமுகர் வேலுசாமி கொலை வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக திருமலைராஜன் ஆஜராகி வாதிட்டார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சசிரேகா, குற்றம்சாட்டப்பட்ட, சிவா (எ) சிவக்குமார் (39), ராஜ்கமல் (எ) ராஜேந்திரன் (40),  கணேசன் (எ) மிலிட்டரி கணேசன் (58), அவரது மகன் அருண் (எ) அருண்குமார் (32), அன்பு (எ) அன்பழகன் (46) ஆகிய 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ₹20 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். 12 ஆண்டுகளுக்கு பின் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

Related Stories: